சர்வோத்தமனின் கதைகளைப் பற்றி எழுதுவது என்றால் அவரது கதைகளின் Narration ல் இருக்கும் சில பண்புகளைக் குறிப்பிட முயற்சிக்கிறேன். அதன்மூலம் அது எந்தளவுக்கு கதையை வாசிக்கும்போது சில கவனிப்புகளை/இடர்களை அளித்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது.
சர்வோத்தமன் கதைகள் வழக்கமான சிறுகதைகளுக்குரியவை அல்ல. அதில் திடுக்கிடும் உக்தி கிடையாது, திருப்பம் அறவே இல்லை, காவிய தரிசனத்தைக் காட்டும் கணங்களைக் கொண்ட முடிவு இல்லை. மாறாக நமக்கு ஒரு சலிப்பை ஊட்டுகிறது. ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்படுமளவிற்கு கதைக்குள் சம்பவங்களும் குரல்களும் உலக விசாரணையும் வருகின்றன. இத்தனையும் சுமந்துகொண்டு கதை மெல்ல நகர்கிறது. மெல்ல என்றால் ஒவ்வொரு சம்பவங்களும் அங்கு நடக்கும் ஒவ்வொரு பொருளையும் கதைக்குள் திணிக்கப் பாடாய் படுகிறது.
இரண்டு பேர் பங்கு பெறும் உரையாடலோ அல்லது ஒரு சம்பவத்திற்குரிய இடமோ கதைக்குள் வரும்போது அங்கு நடக்கும் சின்ன தகவல்கள்கூட விட்டுபோக விடாமல் இடம் பெறுகின்றன. இது கதைசொல்லிக்கு அவற்றை கதைக்குள் வைக்க வேண்டிய கட்டாயத்தின் பெயரில் இல்லை மாறாக அதுவே கதையைப் பிண்ணக்கூடிய மொழியின் அலகுகளாக உள்ளன.
ஆனால் இந்த அலகுகள் கதையை நிகழ்த்துகிற இடத்தை இன்னும் விரிவாக்கி தகவல்பூர்வமாக்கி கதையிலிருந்து “நிகழ்வை” வெளியே அகற்றி ஒருவித சோர்வை உண்டாக்கவும் செய்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் கதைக்குள் பங்குபெறும் புறவெளிகள் கதையை ஊதிப்பெரிதாக்கிவிடுகின்றன. இது எந்தக் கதையில் கதையை இன்னும் செறிவாக்க முயன்று இருக்கின்றன என்பதையும் எந்தக் கதையில் சோர்வாக மாறிவிட்டிருக்கின்றன என்றும் பார்க்கலாம்
உதாரணத்திற்கு சவரக்கத்தி என்கிற கதையில் கதைசொல்லி தோல் மருத்துவரைப் பார்க்க நிற்கிறார். அவரது நேரமின்மை அந்த இடத்தையும் அந்தக் கணத்தையும் விவரிக்கிறது. அப்படியொரு தருணத்தில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுகின்ற அனுபவம் அது. ஒவ்வொரு பொருளையும் சின்னஞ்சிறிய ஒலியையும் காட்சியையும் வெறுமனே சம்பந்தமில்லாதபோது அந்தக் காத்திருப்பு நேரத்தை நிறப்புகிறவையாக இடம் பெறும். அப்படி ஒரு விவரிப்பு இந்தக் கதையில் தகவல்களாக வருகின்றன.
நான் கீழே இறங்கிச்சென்றேன். அந்த ஆலமரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் திண்ணையில் அமர்ந்துகொண்டேன். டீ பையன் அங்கேயே நின்றான். அவன் வைத்திருந்த ரேடியோவில் இளையாராஜாவின் குரலில் ஜனனி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப் பையன் சூரியொதயத்தைப் பார்த்தவாறு நின்றான். அவன் அத்தனை ஏகாந்தமாக நிற்பதைப் பார்கக் ஆச்சரியமாக இருந்தது.
இப்படி விவரிக்கின்ற இடத்தில் அடுத்தடுத்த ஒவ்வொருவரையும் கதைசொல்லி நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
சர்வோத்தமனின் எல்லா கதைகளிலும் இவ்வாறான விவரிப்புகள் வழியேதான் அந்தக் கதை சொல்லப்படுகிறது. அதன் மூலம் கதையின் இயல்பும் கதைசொல்லியின் குணமும் அல்லது வேறொரு கதாப்பாத்திரங்களில் உணர்வுகளும் வாசகனுக்குக் காட்டப்படுகின்றன.
உதாரணத்திற்கு, பூதக்கண்ணாடியை கதையை எடுத்துக்கொண்டால், வெங்கடன் தன் நண்பன் பஷீரை சந்திக்கிறான். இருவரின் குணம் சார்ந்த அவர்களது இயல்பை அவர்களது அன்றாடத்தின் சின்னஞ்சிறிய நிகழ்வுகள் மூலம் அக்கதாப்பாத்திரங்களை வடிவமைக்கின்றன. ஆசிரியர் எந்த இடத்திலும் பேசுவதில்லை. பதிலாக அக்கதைக்குள் இயங்குகின்ற நுண்தகவல்களும் காட்சிகளும் அதைச் சொல்கின்றன.
உதவி என்கிற கதையில் இதே தகவல் வேறு விதமாக இடம் பெறுகிறது. வேங்கடன் பேருந்தில் பார்க்கிற “ஃபிலிம் சென்ஸ்“ புத்தகத்தின் மூலம் ஒரு புதிய அனுபவத்தினுள் நுழைகிறான். பிறகு அது அவனது அன்றாடத்தை மாற்றியமைக்கிறது. இறுதியில் அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்கிறான். இந்தக் கதையை நகர்த்துவது முழுக்க முழுக்க ஒரு இளைஞனின் அன்றாடப் பொழுதுகளில் அவனுக்கு விருப்பமின்றி ஆனால் மற்றவர்களுக்கு பொருட்படுத்தக்கூடிய வகையில் இயங்கும் புறவெளிகள்தான்.
சர்வோத்தமன் கதைகளிலிருக்கும் Narrator யார்? நம்மை சோர்வடையச் செய்யும் எந்தவொன்று இந்தக் கதைகளுக்குள் இருக்கிறது? Narrator தனக்கான உறவுகளை அவரே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
சர்வோத்தமனின் கதைகளில் வெளி உலகைச் சார்ந்த ஒரு ஒவ்வாமை இருக்கிறது. பொருளாதாரச் சந்தையை நோக்கி பேசுகிறது, வர்க்க உறவைச் சீண்டுகிறது, நவீன விஞ்ஞானத்தின்மீதான நம்பிக்கை அழுத்தமாக்குகிறது, கீழ்மையான குணங்களை எந்த குற்றவுணர்வுமின்றி பதிவு செய்கிறது
இந்த குணவியல்புகளால் ஆன ஒருவனே சர்வோத்தமனின் கதைக்குள் உலவுகிறான். உலகம் அவனது பார்வையிலிருந்து நமக்கு விரிகிறது. தனது சுயத்தைப் பாதித்த மற்றமைகளின் இருப்பை அவன் நம் முன் காட்டுகிறான். தாராளமயமாக்கலைப் பற்றி பேசுகிறான். நவீன பொருளாதாரத்தைச் சாடுகிறான் அதே நேரம் நவீன விஞ்ஞானத்தின் பாதிப்புகளை மதிப்பிடாமல் இல்லை. மார்க்ஸிய சிந்தனையை சரியான புரிதலுடன் விமர்சிக்கிற தொனியை அதில் பார்க்கலாம். உலகம் இருமைகளால் பிணைந்திருப்பதை அவன் முக்கியமானதெனச் சுட்டுகிறான். இதனாலயே அவனுடைய உலகம் மிகவும் மெதுவாக இயங்குகிறது. அவசரத்தைப் பற்றிய பதற்றம் இல்லை. எதுவும் அவனைத் திடுக்கிடச் செய்யவோ, திருப்பத்தை ஏற்படுத்தவோ, அறம் சார்ந்த தரிசனத்தைத் தரவோ இல்லை. எல்லாம் அதனதன் இருப்பில் சாவகாசமாக தன் பிருஷ்டத்தை வைத்துக்கொண்டிருக்கிறது. நாம்தான் உலகத்தை அவசரமாகச் சுற்றுகிறோம். ஆகவே கதைசொல்லி தனக்கான உறவுகளை அவனே தேர்ந்தெடுக்கிறான்.
இந்தக் காரணத்தினாலேயே கதைகள் ஒருவித சலிப்பை நமக்கு ஏற்படுத்துகிறது. அது கதைகளுக்குள் இயங்கும் சமகாலத்தின்மீதான பிரதிபலிப்பு என்கிற முடிவுக்கு நாம் வர வேண்டியுள்ளது. நான் வந்தேன், உட்கார்ந்தேன், படுத்தேன், உறங்கினேன் போன்ற கதைமொழிகூட கதைசொல்லியின் உலகில் இயங்கும் சலிப்புக்குரியவைதான். தான் நினைத்த உலகுக்கும் தான் விரும்பாத உலகுக்குமான இரு புள்ளிகளுக்கிடைய நிகழ்த்தும் விசாரணையை தனது சலிப்பான Narration வழியாக கதைகளாகச் சொல்ல முயற்சிக்கிறார் சர்வோத்தமன்.