Monday, April 15, 2024

போகூழ் – அதிகாரங்களின் விதி

போகூழ்

கவிதை என்பதே ஓர் அரசியல் செயல்பாடுதான். ஞானக்கூத்தன் சொல்வதுபோல கவிதையை குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். குடும்பம் சமூகத்தின் அரசியலைப் பிரதிபலிக்கிறது. அதன் அமைப்பு அரசதிகாரத்தின் படிநிலையில் இயங்குகிறது. தமிழின் நவீனக் கவிதைகள் அனைத்துமே குடும்ப அமைப்பின் அதிகாரத்தைப் பேசுகின்றன. அந்த அதிகாரச் செயல்பாட்டை பேசுவதன் மூலம் அரசியலதிகாரத்தைக் கேள்விக்குக்குட்படுத்துகின்றன. பின்நவீனத்துவத்தில் இந்த “அதிகாரம்” பல நுண் வடிவங்களாக சிதறலடைகிறது. அது “அதிகாரத்தை“ சமூகத்தின் அத்தனைக் கட்டமைப்புகளிலும் அடையாளம் காண்கிறது. இந்தச் சமூகம் அதிகாரங்களால் உருவானது. அதன் ஒவ்வொரு த்வனியும் அசைவும் ஏன், மௌனமும்கூட அதிகாரத்தின் வெளிப்பாடு.

தியாகராஜனின் கவிதைகள் சமூகத்தில் பல நுண் வடிவங்களில் சிதறியிருக்கும் “அதிகாரங்களை” கோர்க்கின்றன. பலூன் வியாபாரியிடமிருக்கும் வண்ண பலூன்களாக அவை அந்தரத்தில் நிற்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் தியாகராஜனின் கவிதைகளில் இந்த அதிகாரம் எப்படியான தன்மையில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

முதலில், அதிகாரம் என்பதை அதன் நேரடித்தன்மையிலிருந்து பருமணாக்கிக் காட்டுவதை மட்டும் இக்கவிதை செய்யவில்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுகிறோம். அதிகாரங்கள் செயல்படும் விதங்கள் வெவ்வேறு பருண்மைகளாக அதன் தன்மைகளில் புரிந்துகொள்ள முயற்சிகின்றன. கவிதைத் தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கையில் கவிதைசொல்லியின் எண்ணம் அதிகாரத்தை மட்டும் சொல்லிவிட்டு விலகுவதில்லையென்பதும் அதன் நுண் வடிவங்களை பருமணிலிருந்து எண்ணங்களுக்கு திருப்புவதை ஒரு தளத்திலும், அதிகாரத்தின் மூலத்தைத் தொட்டுமீளும் இன்னொரு தளத்தையும், செயல்படாத இடங்களில் அதிகாரம் “கல்லெ”ன அமர்ந்திருக்கும் உருவத்தை மற்றொரு இடத்திலும் என அதன் ஒவ்வொரு வடிவங்களையும் அடையாளம் காட்ட முயல்கிறது. சில இடங்களில் இன்னதென்று அறியாத தன்மீதான குற்ற நடவடிக்கைப் புரியும் காஃப்காயிஸ அதிகாரம், மானுட உறவுமீதான நம்பிக்கையை கலைத்துபோடும் அர்த்தமிழப்புகளுக்குள் செயல்படும் நுண் அதிகாரங்கள் எனவும் அதன் பட்டியல் நீள்கிறது.

உங்களையச் சுட நினைத்திருந்தால்
எப்போதோ ரிவால்வரை உயர்த்திருக்க முடியும்
இவ்வளவு நேரம் திரும்ப ஒருமுறை அனைத்தையும்
நினைவுகூறப் பார்த்தேன்
காலத்தின் அதீதத்தை அளவுக்கு மீறியே
சுமந்துவிட்டதாகப்படுகிறது
எனவே கைகளை மெல்ல தூக்கி
உங்களை விசுவாசப்படுத்தினேன்

இந்த இரண்டவாது கவிதையில் வெளிப்படும் அதிகாரம் என்பது “உங்களை விசுவாசப்படுத்தினேன்” என்கிற வரிகளில் இருக்கும் குரூரத்தின்மீது நடக்கிறது. ஆனால் இந்த கடைசி வரி மட்டுமே அதன் மொத்த அதிகாரத்தையும் சொல்லிவிடாமல், மாறாக அக்கடைசி வரி அதிகாரத்தின் குரூரத்தைக் காட்ட பயன்படுகிறது. உங்களைச் சுட நினைத்திருந்தால் எப்போதோ ரிவால்வரை உயர்த்திருக்க முடியும் என்கிறபோது இன்னும் அவன் சுடப்படவில்லை என்பது உண்மை அதே சமயம் சுடப்படப்போகிறவனை தப்பிவிக்கும் கருனையும் அங்கு நிகழவில்லை. இதற்கிடையில் காலத்தின் அதீதத்தை சுமக்குமளவு நினைவுகூறல் அங்கு நடைபெறுகிறது. அதாவது சுடுதல் என்கிற செயல் அங்கு நடந்தே தீர வேண்டும். அதை நிறுத்தப்போகும் எந்த புறவெளியும் அரங்கேறவில்லை. இவ்வளவு நேரம் திரும்ப நினைவுகூர வைக்கும் காலம் என்பது சுடப்போகிறவனுக்கும் சுடப்படுகிறவனுக்குமான தண்டனையைத் தள்ளிபோடல் என்கிற தாமத்த்தின்மீது சுமையை ஏற்றிவிடுகிறது. கடைசியில் அந்தக் கணநேர விசுவாசம் மட்டுமே சுடப்படுகிறவனுக்கு அளிக்கும் தண்டனையின் குரூரத்தைக் கொடுக்கிறது. அதாவது, விசுவாசம் என்கிற சொல் இங்கு அதன் பொருளுக்கு நேரெதிராக அர்த்தப்படுகிறது என்பதை கவனிக்கவும். அது குரூரமாகவும் வன்மமாகவும் மாறுகிறது.
இன்னொரு கவிதையைப் பார்க்கலாம் –

பழைய நட்சத்திரத்தின் பல் விழுந்த திசையில்
நீ அமர்ந்திருக்கிறாய்
அங்கிருந்து உன் காதலிக்காக அழத் தொடங்கலாம்
உன் தலைமுடியை ஒதுக்கி
உன்னை அவர்கள் முத்தமிடுவார்கள்
உன்னிலிருந்து விழுவதற்காக ஒரு பல் ஆடத் தொடங்கும்

இந்தக் கவிதை நேரடியாக அதிகாரத்தைப் பேசவில்லை. பதிலாக ஓர் அரவணைப்பை உருவாக்குகிறது. காதலிக்காக அழும் ஒருவன், அவனை ஆதுரமாக அனைக்கும் யாரோ, அவனிலிருந்து விழப்போகும் பல். அதாவாது, ஏற்கெனவே அந்த இடம் ஒரு காலமற்ற வெளியாக இங்கு சுட்டப்படுகிறது. அவன் அழுவது காதலிக்காகத்தான் என்பதை கவிதை நமக்கு தெரிவிக்கிறது. அவனுக்கு ஆறுதல் சொல்லும் யாரோ சிலரால் அவனது பல் ஆடத் தொடங்கும் என்கிற “எச்சரிக்கையும்“ ஒலிக்கிறது. பல் விழவில்லை. “அவர்கள்” பல்லை உடைக்கவோ அல்லது அதற்கான எந்தச் செயலையும் செய்யாமல் இருக்கிறார்கள். பல் விழப்போவது நற்குறியாகவும் இங்கு பொருள்படக்கூடியதாக இல்லை ஆக அதுவொரு எச்சரிக்கை.
தியாகராஜனின் கவிதைகளில் புழங்கும் இன்னொரு அம்சம். கவிதைசொல்லி ஒருசில கவிதைகளில்தான் அவரை இன்னாரென அடையாளம் காணமுடிகிறது. அவரது பெயர், பால், இனம், தொழில், நிலம் நமக்கு கிடைப்பதில்லை. தன்னை மேலே சொன்ன அடையாளங்களிலிருந்து வெளியேற்றிக்கொள்கிறார். அடையாளங்களும் சமயங்களில் அதிகாரத்தின் வர்க்கத்துக்குரியவைதானே.

கவிதைகளில் இந்த அடையாளமற்ற நபரை கட்டுபடுத்தும் சில அடையாளமற்ற அதிகார வர்க்கங்கள் வருகின்றன. நம்மால் “கட்டுபடுத்தும் அந்த அதிகார வர்க்கங்களை” அடையாளம் காண முடிகிற அளவுக்கு, வதைக்குள்ளாகும் நபரைக் காணமுடியவில்லை. வதைக்குள்ளாகுபவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் இல்லையா? தியாகராஜனின் கவிதைசொல்லியின் நோக்கம் பல சமயங்களில் அப்படியாகவே இருக்கிறது. கீழே உள்ள கவிதை அடையாளம் x அடையாளமற்றதை சுட்டுவதைப் பார்க்கலாம்.

இதை அவர்கள் திட்டமிட்டுச் செய்யும்போது
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை
இன்று இல்லாட்டி நாளை என்றோ ஒருநாள்
உன்கதை முடிந்து விடுமெனத் தெரிந்தததுதான்
இப்போ நீ உயிரோடிருப்பதில் ஏன் வியப்பதில்லை என்றால்
இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் என்றுதான்
அவர்கள் மீதே அவர்கள் அதைச் செய்துகொண்டிருக்கும்போது
கொலைபுரிதலுக்கு ஒரு வழக்கா என்று
எல்லோரும் குழம்பத்தான் செய்வார்கள்
நீதியென்பது உயிரோடிருக்கும் வரை எதுவும் சரிதான் என்பதுதானே

குற்றமும் குற்றத்திற்கான நீதியும் அதிகாரத்தின் முதல்நிலையில் இருக்கும்போது கொலைபுரிதல் இங்கு குற்ற செயல்பாடு என்பது அதன் உச்ச நிலையிலிருந்து விடுவிக்கப்படுவதாக அந்தச் சொல் சுட்டுகிறது. ஆக, அவர்கள் அவர்கள்மீதே செய்துகொண்டிருப்பதற்கும் நீ உயிரோடிருப்பது வியப்பில்லையென்பதும் நேரடி அர்த்தத்தில் வரவில்லை. அதாவது, கவிதையின் தன்னிலை இந்த இருவருக்கும் ( அவர்கள், நீ) வெளியே நிற்கும் யாரோ ஒருவரால் “ஒருநாள் நீ கொலை செய்யப்படுவாய்” என்பதையும் கொலைபுரிதலுக்கு வழக்கு என்பது இங்கு நியாயமானதன்று என்பதையும் வெளிப்படுத்துகிறது (எச்சரிக்கிறது). இந்தக் காட்சி காஃப்காவின் விசாரனை நாயகனுக்கு நிகழும் குழப்பத்தை நினைவூட்டும் அதிகாரம். இங்கு, அவர்கள் x நீ என்பது அடையாளமற்றவர்கள். ஆனால் குற்றம் x தீர்ப்பு என்கிற செயல்தான் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது.

2. கொதிமணல் என்கிற பகுதிகளில் வரும் காதல் கவிதைகளிலும் காதலியிடம் அல்லது காதலைப் பற்றி கேட்பவரிடம் கவிதைசொல்லி சொல்லும் தாத்பரியங்கள்கூட காதலில் ஒளிந்திருக்கும் அதிகாரத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது..

நிச்சய வார்த்தையானது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது
குறிப்பிட்ட இடத்திற்கு நீ வராமல் போக
சாதாரணச் சம்பவங்களே போதுமானது
குறிப்பாக உனக்குத் தலைவலியென்றால்
உடனே தூங்க வேண்டும்
பூமியின் நிறையைச் சரிசெய்யும்
ஒருவார்த்தை இன்னும் அளிக்கப்படவில்லை
அது புலன்களால் நுகர்ந்துகொண்டிருப்பவனுக்கு
எவ்வளவு கொடியதென்று புரியும்
மேலும் அதுவொரு சாதாரண வார்தையெனச் சொல்ல
உனக்கு முழு உரிமையுமிருக்கிறது
அதைக் கேள்வி கேட்கும் என்னிடம்
வெறும் எதிர்பார்ப்புகள்தான் இருக்கின்றன
பௌதீக உலகிலும் உனக்கு மதிப்பு அதிகம்தான் என் அழகியே

காதலிக்காகக் காத்திருக்கும் காதலனின் செயலாக அந்த வரிகளை எடுத்துக்கொள்வோம். வருவதைத் தள்ளிப் போடுவது உறுதியென்றபோதும் (”நிச்சய வார்த்தையானது சந்தேகத்திற்குரியதாக” எனத் தொடங்கும் முதல் வரி) அதற்கானக் காரணத்தையும் அவள் சொல்லப்போவதை தெரிந்திருக்கும் மனநிலையும் வருகிறது. அவளது ‘சாக்குச்சொல்‘ அங்கு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் நிறை அவ்வளவு கனமிக்கதாக உள்ளது. ஆனால் அவனிடம் இருப்பது அதற்கான எதிர்பார்ப்புகள்தான். அதற்குரிய அர்த்தம் வெறும் சாதாரணமானது என்பதாக அதனை அவன் விளிக்கிறான். அவள் வராததற்குக் கூறப் போகும் காரணச்சொல் அர்த்தமில்லாதது என்பதும் அதற்கான நிறை அவனது உலகில் கனமிக்கது என்பதும் தெரிகிறது. ஆனால் அவள் வரவே மாட்டாள் என்கிற உண்மையை அவன் தெரிந்துகொண்டு, சொல்லப்போகும் அந்தச் சாதாரணச் சொல்லின் (‘சாக்குச்சொல்லின்‘) அதிகாரத்தைக் கவனிக்கிறான். அச்சொல்லுக்கும் அர்த்தம் என்பது அவள் வராதக் காரணத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும் அதிகாரவயத்தின் தொனியை உட்படுத்தியது. இதுவும் முதலில் பார்த்த கவிதையில் ‘அவர்கள் அதை திட்டமிட்டுச் செய்யும்போது‘ (ஏற்கெனவே முடிவு செய்ததாக) என்கிற கவிதையில் தொனிக்கும் அதிகாரத்துடன் இணைக்க முடிகிறது.

குறிப்பாக இங்கு காதல் கவிதைகளிலும் கவிதைக்குரிய கருபொருள்கள் என்று நாம் வழக்கமாக காணும் மரம், கடல், பூக்கள், நவீன உலகின் காதலுக்குரிய சாதணங்கள் என எதையும் பார்க்க முடியவில்லை. மாறாக காதலின் உணர்வுகளை அதனுள் இயங்கும் நுண் அதிகாரங்கள் வழியாகவே கவிதைசொல்லி அந்த வஸ்துக்களை இடம்பெயர்த்துகிறார். இவரது கவிதைகளில் பாடுபொருள்கள் அழகியலையோ வலிகளை உணர்த்தும் மனிதம் அல்லாத பொருள்களையோ கொண்டிருப்பதில்லை. ஆனால் காதல் என்கிற மென் உணர்வுகள் அதிகாரங்களாக வருகின்றன. காதலில் ஏற்படும் வலி, ஏக்கம், பரிகாசம், ஏமாற்றம் இப்படியான அதன் எதிர்மறை உணர்வுகளுக்குள் வெளிப்படும் அதிகாரத்தை கவிமனதின் பிரக்ஞை அடிக்கோடிடுகிறது.
இன்னொன்று, காதலின் ஏகாந்தத் திளைப்பில் உருகுவதில் லயித்தலில் கவிதைசொல்லி இல்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியான கவிதைகள் இங்கு இடம் பெறவில்லை. காதல் இங்கு தோல்வி அடைகிறது. கவிதைசொல்லி அதனை புலனாய்கிறது. இன்னொரு கவிதையைப் பார்க்கலாம்

அவளின் துப்பட்டா உங்கள் கண்ணை உரசியதா
அதற்கு முன்னால் அப்படியொரு வாசனை பழகியதில்லை என்பதால்
என்னுடனே வருகிறது அந்த இரயில் பெட்டி
எந்தப் பிரயாணிகளும் இல்லாமல்
அதை இயக்குவது மிகவும் கொடுமையானதுதான்
ஆனால் அதற்காகத்தானே சரியான நேரத்திற்கு
அந்தக் கணம் அனுப்பப்பட்டது
மேலும் அந்தப்பெண் அழகாகவும் இருந்தாள்
என் பால்யம் இப்படித்தான் மெல்ல மெல்ல களவாடப்பட்டது

இந்தக் கவிதையை வாசித்ததும் சற்று மனம் லயிக்கும். ஒரு பெண்ணின் கடந்துபோன இருப்பைப் பேசுகிறது. அதன்மூலம் கவிதைசொல்லியின் பால்ய காலத்தின் எல்லா தடயங்களையும் அது காட்ட யத்தனிக்கிறது. பெண்ணின் துப்பட்டா, அதன் வாசனை என்கிற தவிப்பு உடனே இரயில் பெட்டிகளைக் கொண்டுவந்துவிடுகிறது. இங்கு முக்கியமாக காலியான இரயில் பெட்டிகள் என்று குறிப்பிடாமல் அதில் “பிரயாணிகளும்” என்கிற சொல்லைத் தேர்ந்தெடுத்திருப்பதைக் கவனிக்க வேண்டும். அது வெறும் காலியாக ஓடிக்கொண்டிருக்கும் இரயில் பெட்டி அல்ல என்பதும் அதுவரை பிரயாணிகள் பிரயாணித்து அந்தக் கணத்தில் அங்கு யாரும் இப்போது இல்லை என்பது தெளிவாகிறது. ஆதலால் அதை இயக்குவது பற்றிய வலியை கவிதைப் பேசுகிறது. கடைசியாக அந்தப் பெண் அழகாகவும் இருந்தாள் என்று தன்னிடமிருந்து களவாடப்பட்ட பால்யத்தை விசனப்படுகிறது. இந்தக்கவிதைகளில் அதிகாரம் என்கிற பதமோ அதை நிகழ்த்தும் செயலோ இல்லையே என நினைக்கலாம். இருக்கிறது எப்படியென்றால் ஒன்று, வாசனைக்கும் பால்ய காலத்திற்கும் இடையே களவாடப்படும் தருணமாக அல்லது தனது லயிப்பை நிராகரித்து தன்னிடமிருந்து பறித்துக்கொள்ளும் உருவகமாக வரும் காலியான இரயில் பெட்டி அங்கு திடீரென்று எங்கிருந்தோ வருவதில்லை. இரண்டாவது, கவிதைசொல்லி அதில் பயணிக்கும் கற்பனையில் இல்லை. மாறாக அது “அதற்காகத்தானே சரியான நேரத்திற்கு ஒரு கணத்தால் அனுப்படுகிறது” என்று குற்றம் சாட்டுகிறது. மனம் கொள்ளும் ஆசுவாசத்தையும் தித்திப்பையும் லயிப்பையும் அழித்துவிட்டு நகர ஒரு கணம் எங்கிருந்தோ ‘ஓர் அதிகாரத்திற்குரிய செயல்பாடால் அனுப்பப்படும் ‘ என்பதாக அடையாளம் காணலாம்.

3. அசதிகளின் கவலை என்கிற தலைப்பில் வரும் கவிதைகள் அனைத்தும் கொதிமணல் பகுதிகளில் பார்த்த கவிதைகளைப் போன்று நுண் அதிகாரங்ளைப் பேசவில்லை. அதிகாரங்களால் கட்டப்பட்ட இச்சமூகத்தை நேரடியாகச் சாடுகிறது. இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை எல்லாருடைய விதியும் எழுதப்பட்டுவிட்டன என்கிற த்வனியைக் கொண்டிருக்கின்றன. அதன் முதல் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது

யாருக்கும் கனவில் குறி விரைக்காத வரை
இது ஜனநாயக நாடுதான்
குண்டுகளைப் பற்றிக் கவலைப்படாமலிருந்தால், சிரிப்பதற்கு மாற்றான உலகில், இனப்படுகொலையை நிகழ்த்தியவர், தீர்க்கதரிகள் வந்துவிட்டார்கள், வெட்டவதற்காகதான் உங்கள தலையை தடவிகொடுக்கிறானென என அடுத்தடுத்தக் கவிதைகள் பெரு நிறுவனங்களின் மௌனச் சித்திரவதைகளையும் அரசின் அதிகார வன்மங்களையும் பேசுகிறது. மௌனமாக இருப்பதும் ஆபத்தான நடவடிக்கைதான் என்று எச்சரிக்கிறது. ஒரு கவிதை மட்டும் கீழே-
சார்பாகப் பேசுவதே போதுமானது
அதன்பிறகு பிறன்மனை நோக்கலாம்
அல்லது காசில்லாமல் வேலையாகாது என்றுகூடச் சொல்லலாம்
ஆனால் சார்பாகப் பேசுவது முக்கியம்
சரி கோபப்படலாம் என்று பார்த்தால்
ஒரு கூட்டம் பிள்ளைக்கறிக் கேட்கிறது
அல்லது கழுவேற்றுகிறார்கள்
சார்பாகப் பேசுவதில் திருப்தி அடையாவிட்டால்
பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்
கழுவேற்றுவதெல்லாம் அந்தக்காலம்

4. மைனஸ் டிகிரி செல்ஷியஸ் தலைப்பின் கவிதைகள் நாம் இதுவரை வாசித்தவற்றை முந்தைய கவிதைகளைவிட சற்று ஆசுவாசம் கொள்கின்றன. ஆசுவாசம் என்றால் அதிகாரத்தின் சக்கர வேகத்திலிருந்து தனது சுயத்தை விடுவிக்க முயல்கிறது என்று சொல்லலாம். இந்தப் பகுதியில் இயங்கும் கவிமனம் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அதிகாரம் என்று இதுவரை எறியப்பட்ட பந்தின் தாக்குதலுக்கு உட்பட்டு, அடியிலிருந்து தப்பிக்க முடியாத கருணையற்ற நிலையை, பந்தை எறிய ஓங்கிய கையை நோக்கிப் பேசிய தொனி, பந்தடி விழப்போகிறவனை நோக்கி எறிந்த எச்சரிக்கை என்றெல்லாம் மாறாமல் பந்தின் விசைக்கு நேரெதிரான திசையில் தன்னைத் தற்காத்துக்கொண்டு சாதுர்யமாக ஒளிந்துகொள்ள முயல்கிறது. இப்போது கவிதைசொல்லிக்கு பகடியும் இளக்காரமும் சுயபச்சாதாபமும் அது ஒளிந்துகொள்ள கைகொடுக்கும் மறைவிடங்களாக மாறுகின்றன.

வாழ்க்கைக்கு ஏதுவாகப் பெயர் மாற்றிக்கொண்ட கூழாங்கற்கள்
எல்லா நதிகளையும் வற்றச்செய்துவிடுகின்றன
பாட்டி சொன்ன நீதிக்கதைகளை நம்பி
நதிகள் கழுத்தை முறித்துக்கொண்டன
பாட்டியின் கதைகளை இப்போது அதிகம் பயன்படுத்துபவை
வழவழப்பான கற்கள்தான்
கூழாங்கற்கள் குளிர்ச்சியானவை
நீங்களவற்றைக் கன்னத்தில் ஒற்றி உங்களுக்குள்ளிருக்கும்
இயற்கை காதலனை பிரபலபடுத்திக்கொள்ளலாம்

இன்னொரு கவிதை,
இன்னும் எத்தனை நூறு அடிகள்
என்னை மேலே தூக்கிப் பறக்கப்போகிறாய் காற்றே
நான் சகஜீவிகளை இவ்வளவு ஆழமாகவா நம்பியிருக்கிறேன்
ஆனால் இன்னமும்கூட என் எல்லை வராமலிருப்பது
பயமாகதான் இருக்கிறது
உயிர் பிரிய போதுமான அளவையும்தாண்டி
போய்க்கொண்டிருக்கிறது
நான் கற்றக்கொண்ட பாடங்கள்

முதல் கவிதையில் நீதிக்கதை என்கிற அறம் சார்ந்த பதத்தை வாழ்வின் யதார்த்த நிகழ்வோடு முடிச்சிட்டு அறிவுரை ஒன்றை சொல்ல முற்படுகிறது அல்லது இங்கு தோய்ந்துபோன பண்பாட்டின் விழுமியம் அல்லது மாறிப்போன உலக நியதி ஒன்றை விளக்குதல் என்று எடுத்துக்கொள்ளலாம். பெயர்களை மாற்றிக்கொள்ளுதல், பாட்டி நீதிக்கதை என்கிற இரு வெவ்வேறு பொருள்கள் முதன்முதலில் இங்கு அறிமுகமாகின்றன. அதாவது பெயர்களை மாற்றிக்கொள்கிறதாக பழைய நீதிக்கதையின் கூழாகற்களை கவிமனம் எடுத்துவருகிறது. கூழாங்கற்களின் தன்மை அடுத்த வரிகளில் வரும்போது கூடவே அதன் குளிர்ச்சி உங்களை இயற்கையின் காதலனை நினைவூட்டும் உன்னதத்திற்கு எடுத்துச்செல்கிறது. சட்டென இந்த இடத்தில் என் மனதில் ஆசுவாசத்தையும் என் உதட்டில் புன்னகையையும் இது தருவிக்கிறது.

அடுத்து வரும் கவிதையில் காற்று கவிதை சொல்லியை அவனது நம்பிக்கைக்குரிய சகமனிதர்களிடத்திலிருந்து மேலே தூக்கிப் பறக்கிறது. அது காப்பாற்றுவதற்கானது அல்ல உயிர் பிரிவதற்கான முயற்சி என அறிவிக்கிறது. அதாவது இருப்பைப் பற்றிய அச்சத்திலிருந்து அவனை காற்று வேறொரு இன்மைக்குக் கொண்டுபோகிறபோது அவனது வாழ்வுகுறித்தான அனுபவங்கள் அவனிலிருந்து விலகுகின்றன என நான் புரிந்துகொள்கிறேன். கூடவே வாழ்வனுபவங்கள் கவிதைசொல்லிக்கு உயிர்பிரிய போதுமான எல்லையையும்தாண்டி தேவைப்படாமலேயே போவதாக, அதை உயர்ந்த இடத்திலிருந்து (சமூகத்தில் அல்லது வாழ்வில் அனுபவங்களுக்கென இருக்கும் உயர்ந்த இடம்) கீழிறக்கிவிடுகிறது. இப்படி இந்தக் கவிதைக்குள் நிறைய அர்த்தங்களை எடுத்துக்கொண்டே இருக்கலாம். இங்கு சொல்லவருவது இதன் அர்த்தத்தைத் தேடுவது அல்ல. முன்னரே கூறியதுபோல இந்த மைனஸ் டிகிரி செல்ஷியஸ் பகுதியில் வரும் கவிமனதைப் புரிந்து கொள்வதுதான் நோக்கம்.

இந்த இரு கவிதைகளிலும் செயல்படுகிற தொனி இதுவரை வாசித்த கவிதைகளிலிருந்து வேறுபடுகிறது. இங்கு கூழாங்கற்கள், காற்று, குளிர்ச்சி, பறத்தல் என பௌதீக உலகிலிருந்து விடுவிக்கும் வஸ்துகள் வருகின்றன. இதுவரை வாசித்தக் கவிதைகளில் அதிகாரத்தைச் சாடிய, எச்சரித்த, விசாரணை செய்த கவிமனம் அல்ல இங்கு இயங்குவது. அதே நேரம் அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியங்களை தான் வைத்திருப்பதாக நம்ப முயற்சிக்கிறது . இதை நிரூபிக்கும் சில கவிதைகளிலிருந்து வரிகள்…..

ஆனால் நிச்சயம் நான் அவர் தொட்டியில் நீந்தவில்லை, மனிதமா இல்லை நானா எனக் கொடுப்பட்ட வாய்ப்பில் நான் என்னையே தேர்ந்தெடுக்கிறேன், ஒரு சிறிய மீன்தொட்டி மீது வீசப்படும் கல்லைப் போன்று அது அவ்வளவு நொறுங்கச் செய்யாது ஏனெனில் அப்படியான மீன்தொட்டி என்னிடம் இல்லை , போன்ற வரிகளை இப்படி இணைத்துப் பார்க்கலாம். மனித இருப்பை வெருட்டிக்கொண்டேயிருக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்க புதிய வஸ்துக்களைச் சிருஷ்டித்து அதனை தன் வசப்படுத்திக்கொள்ள போராடுகிறான்.
இளம்பிராயத்து ஏக்க நினைவுகள், அழகியல் சார்ந்த ஏக்கம், நகர/கிராம வாழ்வின் நொய்மை அல்லது கனவுகள், நிகழ்காலத்தின் தொழில்நுட்பங்கள் சார்ந்த கற்பிதங்கள், காமம் காதல் உணர்வுகளில் லயிக்கும் நிகழ் கண மெய்மை என வழக்கமான கவிதைகளில் விலகி சமகால வாழ்வில் நம்மீது கவிந்திருக்கும் கருணை, அன்பு, காதல், ஆதுரம், குழு, பற்றுதல், பாதுகாத்தல், கட்டிடங்கள், கனவுகள் என அத்தனையிலும் ஒளிந்துகொண்டிருக்கும் பிறிதொரு உருவத்தை (அருவத்தை) அதிகாரத்தின் சாட்சியாக இனம் காண்கிறது என்பதில் தமிழுக்கு போகூழ் தொகுப்பு புது வரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *