பிரவீன் மனோ
‘பொற்பனையான்’ சித்ரனின் இரண்டாவது தொகுப்பு. வழக்கமான சிறுகதைத் தொகுப்புக்கான வடிவத்தில் இல்லாமல் ஐந்து குறுங்கதைகள், ஐந்து சிறுகதைகள், ஒரு நெடுங்கதை என்கிற கலவையான அமைப்பில் வெளிவந்துள்ளது.
சித்ரனின் கதைகள் யதார்த்த வகையைச் சேர்ந்தவை. யதார்த்தத்தை நமக்கு மிக அருகில் கொண்டு வருகின்ற புனைவு நடை. சாய்ந்தர வேளையில் தெருவிளக்கு வெளிச்சத்தில் சிமென்ட் கல்லின்மீது கால் மடக்கி அமர்ந்தவாறு ஊர்க்கதைகளைப் பேசும் நடுவயதுக்குரியவர்களின் நக்கலும் சுவாரஸ்யமும் பகடியும் கூடியது இவரது மொழி. ஊர்க்கதைகளில் லகுவாக எள்ளலும் வெவ்வேறு சம்பங்களைக் கோர்த்துக் கதையாக்கும் பேச்சு அதில் இழையோடும். சித்ரனின் கதைசொல்லி கிட்டத்தட்ட இம்மாதிரியான நபர். அந்தக் கதைசொல்லிக்கு ஒரு சம்பவத்தை பிறிதொரு சம்பவத்துடனோ அல்லது கேள்விப்பட்ட பழைய பழமொழியுடனோ அல்லது புராண கதையுடனோ கோர்த்துச் சொல்லத் தெரிகிறது. தொடர்புபடுத்தும் சம்பங்களுக்குள் இருக்கும் கண்ணி நிச்சயம் அது கதைகேட்பவருக்கு போய் சேர்கிறதைப் பற்றி நோக்கம் இருக்காது. அவருக்கு அதை கதையாகச் சொல்வது ஒரு நோக்கம். அதனுள் இழையோடும் பிறிதொரு விளையாட்டு கதைசொல்பவருக்கு மட்டுமே தெரியும். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை பழைய பழமொழியுடன் சேர்த்து கதையாகச் சொல்லும்போது உண்மையில் அந்தச் சம்பவத்தை பகடி செய்யும் நோக்கம் அதில் இருக்கலாம். கேட்பவர் அதன் உள் அர்த்தத்தை அறியாமலயே அதை கதையாகக் கேட்டுக் கொண்டிருப்பது அவ்வகையான ஊர்க்கதைப் பேச்சின் கலை. சித்ரன் இதை இலக்கியத்தின் மொழி நடை ஒழுங்குக்குள் செய்கிறார்.
பொற்பனையான் என்கிற நெடுங்கதைத் தவிர்த்து பிற ஐந்து கதைகளையும் இரண்டு வகையில் பிரிப்பதன் மூலம் சித்ரனின் கதை உலகைப் புரிந்துகொள்ளலாம். வாழ்வின் அறவொழுக்கத்தால் தவறவிட்ட தங்களுக்கு உடமையாகாத, உடமைப்படுத்த முடியாதவற்றின் மீதான ஆற்றாமை வெளிப்படுத்தும் மனிதர்களின் கதை. இரண்டாவது, அன்றாட வாழ்வின் சம்பவங்களைக்.கேளிக்கை மனோபாவத்துடன் வேடிக்கைப் பார்க்கும் சிறுவனின் பார்வை. இந்த இரண்டு உலகங்களில்தான் சித்ரனின் கதை நிகழ்கிறது.
ஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணையும், முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை, பெரியப்பா, உடல் இயற்கை உறவு எனும் ஃ என நான்கு கதை உலகங்களும் கிட்டத்தட்ட தங்களது உடைமையை அடைய முடியாத ஆற்றாமையைக் கொண்ட நடுத்தர வயது ஆண்கள். பரமசிவத்திற்கு தனது இழந்த வாழ்வை மீட்டுக்கொள்ள அடைய முடியாத பிறிதொரு வழி சாத்தியமாகிறது, பழைய புத்தகங்கள் விற்கும் சுப்பையாவும் தன் கடைக்கு வருகிற சிறுவர்களுக்கு அவர் காட்டும் உலகம் என அப்படியானதொரு மாய சிருஷ்டியைத்தான் தேர்ந்தெடுக்கிறார், நாய் ஒருவகையில் தன் கைமீறிப் போன உடைமை அதைத் திரும்பப் பெற முடியாமல் பெரியப்பாவும் வேறொரு முடிவுக்கு போகிறார், மரசிற்பம் செதுக்கும் சேகருக்கு அது அரூபமான பெண்ணின் வழித் தோன்றலால் வந்து போகிறது. குறிப்பாக சுப்பையாவின் கதையை நம்மால் அந்தக் கதைசொல்லியின் இடத்தில் வாசிக்க முடியும். கதையின் நாயகனாக கதைசொல்லி ஒரு சிறுவன் அவனுக்கு காமிக்ஸ்களை அறிமுகப்படுத்தும் நண்பன், வினோத நூலகம்போல அவனுக்குத் தென்படும் பழைய புத்தகக்கடை, அதன் மறைவு பகுதி, அதிலிருந்து அவனுக்குள் விரியும் உலகம், பிறகு அவனுக்குள் நடக்கும் மாற்றங்கள் என ஒட்டுமொத்தக் கதையையும் காமிக்ஸ் போல வாசிக்கும் சாத்தியம் அதில் இருக்கிறது. அதே சமயம் சுப்பையா ஒரு தன்பால் விரும்பி என்பதை உறுதிபடுத்தியபின் தீ விபத்து சமயத்தில் அவரது குறி கிளர்வதும் அதன்பிறகு அவர்களுக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறப்பதும்தான் அக்கதையின் புனைவு தர்கத்தைமீறிப் போய்விடுகிறது.
நைனாரியும் பதின் கரைகளும் முழுக்க முழுக்க கேளிக்கை உலகை எட்டிப்பார்க்கும் சிறுவனின் பார்வை என்றாலும் மற்ற நான்கு கதைகளுக்குள் அந்தச் சிறுவன் இன்னொரு கதைசொல்லியாகவே வருகிறான். அதாவது இப்படிச் சொல்லிப் பார்க்கலாம், சித்ரனின் கதைசொல்லி ஊர்க்கதைகளைப் பேசும் நடுவயதுக்காரர் என்றால் கதைகளுக்குள் வெளிப்படும் பிறிதொரு நபரான சிறுவனே, கதையைக் கேட்டும் இரண்டாவது கதைசொல்லியும் ஆகிறான். ஒரு கதைக்குள் இரு வேறு கதைசொல்லிகளை சித்ரன் உருவாக்குகிறார். வாசகன் எந்தப் பக்கம் அமர வேண்டும் என்பது அவரவர விருப்பம்.
சித்ரன் கதைகளில் வரும் ஐம்பதைக் கடந்த ஆண்களின் பார்வையில் விரியும் உலகம், குறிப்பாக பரமசிவம் மற்றும் பெரியப்பா இது ஒருவகையில் சம்பத்தின் சாமியார் ஜூவுக்குப் போகிறாரில் வரும் தினகரன் மற்றும் முடிவுகளில் வரும் சந்திரசேகர் ஆகிய கதாபாத்திரங்களுக்கு நெருக்கமாக வருகிறார்கள். பின்னது உலகின் மெய்மையை சித்தாந்தத்திலிருந்து விலகிப் பார்க்கிறது என்றால் முன்னது அதை யதார்த்தின் மெய்மையில் பார்க்கிறது.
மிக நீண்ட கதையான பொற்பனையான் பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். நூறு பக்க அளவில் சிறிய நாவலாக வர வேண்டியது. நிறைய கிளைக்கதைகளையும் வரலாற்றுத் தகவல்களையும் தொன்ம நம்பிக்கைகளையும் அது கொண்டிருக்கிறது. பனபழங்கள் விழுந்த தொன்மக் கதையிலிருந்து தொடங்கும் இந்த நீள்கதை கீழை தேசத்துக்குள் நுழையும் ரசவாதிக்கும் தமிழின் ரசவாதிக்குமானப் பயணமாக விரிகிறது. கதை பல்வேறு தடங்களில் வாசகனை அழைத்துச் செல்கிறது. தமிழில் இதுபோன்று எழுதப்பட்டிருக்கும் கதைகள் அரிதினும் அரிது. ஜெயமோகனின் ‘பித்தம்’ கதைக்குப் பிறகு இதுமாதிரி ரசவாத வகையில் இப்போதுதான் எழுதப்படுகிறது. பொற்பனையான் கதையில் பேசப்படுகிற அத்தனை ரசவாதக் கூறுகளும் நம்மை பிரமிக்கச் செய்கின்றன. இதற்குப் பின்னால் எழுத்தாளனின் மிகப் பெரிய உழைப்பு உள்ளது. பெனுவா என்கிற பிரஞ்சு ரசவாதியும் பொற்பனையானும் சந்திக்கிற இடம் ஞானத்திற்கும் மெய்யறிவிக்குமான புள்ளி என்றால் இருவரும் பிரிகிற இடம் மனித இருப்பின் விளக்க முடியாத காலத்துக்குள் நுழைகிறது. இக்கதை வாசிப்பதற்கு மிகச் சிக்கலானது. மற்ற ஐந்து கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நடை, தகவல், உலகம், காலம் ஆகிவற்றால் ஆனது. கதை முழுக்க முழுக்க ஆய்வுச் சாலையையும் குருமருந்து கலவைகளுக்குள் இன்னும் ஆழம் ஆழமாக பயணிக்கையில் வாசகனால் மூச்சடைக்கித்தான் கரை தொட முடிகிறது. வாசகன் ஆசுவாசம் கொள்ளும் இடங்கள் இல்லை. எங்கெல்லாம் கதையின் ‘படைப்புக் காலத்துக்குள்’ தொய்வு விழுகிறதோ அங்கெல்லாம் சூனிய உலகை விவரிக்கும் மொழி கதைக்குள் நுழைந்துவிடுகிறது. ஆசிரியர் ஒருவகையில் கதையின் முடிவையும் அவ்வுலகிற்கே ஒப்படைத்துவிடுகிறார். மற்ற கதைகளில் இருக்கும் வழுக்கிச் செல்லும் இயல்பான மொழிநடை இக்கதைக்கு இல்லை. ஒருவேளை கதையின் களமும் காலமும் அதை முடிவெடுத்ததென ஆசிரியர் நினைத்திருக்கலாம். இந்த இரண்டு மட்டும்தான் இந்தக் கதைக்குள் வாசகனுக்கு நேரும் இடர்.
சித்ரனின் கதைகள் மேலோட்டமான தளத்தில் வெகுஜன வாசகர்களையும் வசீகரிக்கும் உள்ளார்ந்த தளத்தில் தீவர இலக்கிய வாசகர்களுக்கும் உட்பட்டவை. ஐந்து குறுங்கதைகளும் ஒன்றுக்கொன்று வெவ்வேறு உணர்வுகளைக் கடத்துகின்றன. குறுங்கதையின் இயல்பே அது சட்டென ஒரு சிறகடிப்பைப் போல் எழக்கூடியது. சித்ரனின் குறுங்கதைகளும் அவ்வாறே. பொற்பனையான் தொகுப்பு சமீபத்திய வரவில் குறிப்பிடத்தக்கது.