- தனக்கு மட்டும் கதைகளைச் சொல்லும் கதைசொல்லி
இந்தத் தொகுப்பில் பூதக்கண்ணாடி என்கிற கதையில் கதைசொல்லி தனது பழைய நண்பனைக் காண வருகிறான். அவனைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. இப்போது எதற்காக என்று அவன் சொல்லவில்லை. நண்பனின் அன்றாட வாழ்க்கையைச் சொல்வதன் வழியே கதைசொல்லியின் வருகை விவரிக்கப்படுகிறது. நண்பன் இவனை மசூதிக்கும் பிறகு திருமணம் செய்யப்போகும் பெண் வீட்டிற்கும் அழைத்துப் போகிறான். அவளையும் வீட்டாரையும் அறிமுகப்படுத்துகிறான். பிறகு அவளைப்பற்றி விவரிக்கிறான். இந்தக் கதையில் நண்பனின் வாழ்க்கையையும் அதன் அன்றாடத்தில் நிகழ்ந்த சில யதார்த்தங்களும் கதைசொல்லிக்குள் எந்தமாதிரி தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதை சடகோபன் சொல்லும்விதம் முதலில் அசோகமித்ரனை நினைவூட்டியது. அசோகமித்ரனின் கதைகளில் கதைசொல்லி முற்றிலும் விலகிவிடுவான். கதையை சுண்டியபடியே கொண்டு செல்வான். ஆனால் கதையில் அவனும் பங்கு கொண்டிருப்பான்.
நீலம் என்கிற கதை காணாமல்போன தந்தையைத் தேடுவதைப் பற்றியது. இதுவும் பூதக்கண்ணாடி கதையைப் போன்றது. கதைசொல்லி தந்தையைப் பற்றி பேசத் துவங்குகையில் கதைக்குள் கதைசொல்லியும் கதாப்பாத்திரமாக மட்டும் இருப்பார்.
டிராகன், உதவி போன்ற கதைகளும் இதே மாதிரியான மிகத் தேர்ந்த கதைசொல்லலை கையாள்கின்றன.
- அகவெளியில் கதை
கவிதைகளில் ஒரு சம்பவத்திற்கோ பெயருக்கோ Referance தேவைப்படாததைப்போன்று சர்வோத்தமனின் கதைகளில் சில சம்பவங்களும் குரல்களும் நிகழ்கின்றன. அதாவது ஒருவித அங்கலாய்ப்பாக அவை இருக்கிறது. திடீரென்று நாட்டின் அரசியலையும் சாதி வேறுபாடுகளையும் பொருளாதாரத்தையும் சில பெயர்கள்மீதான காழ்ப்புகளையும் விதந்தோதல்களையும் கதாப்பாத்திரம் சொல்லிவிட்டு நகர்கிறது. (பெரும்பாலும் இதை கதையின் நாயகன் அல்லது தன்னிலையின் குரல் செய்கிறது) இதை ஒருவகையில் நாம் மனவெளி ஓட்டங்கள் என்று பொருள் படுத்திக்கொள்ளலாம்.
மௌனி மற்றும் நகுலனின் கதைகளில் அக்கதையின் அகவெளிக்கு தனி அர்த்தத்தைக் கொடுக்குக்கூடிய மனவெளி ஓட்டம் அல்ல இவை. மாறாக பிரக்ஞையுடனே கதைசொல்லிக்குள் நிகழும் மொழிப்படுத்தலில் ஏற்படுகிறது. கதாநாயகன் தனக்குள் இருக்கும் ஒருவருக்கு கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறான். தன்னிலையில் சொல்லப்படும் கதைகள் அல்ல இவை. தன்னிலையில் சொல்லப்பட்டாலும் கதைக்குள் கதாப்பாத்திரத்தின் விலகலை உணர முடியும்.
உதாரணத்திற்கு
தன்னிலையில்சொல்லப்படும் கதைகளில் கதாப்பாத்திரம் தான் யார் என்பதை முதலில் அழுத்தமாகச் சொல்லிவிடும் தன்னைப் பற்றியச் சித்திரத்தை முதலில் உருவாக்கும். இது வழக்கமான நமது கதைகளில் உண்டு. ஜெயமோகனின் கதைகள் பெரும்பாலும் தன்னிலையில்தான் சொல்லப்படும் அதில் தன்னைப் பற்றிய தகவலை (யார், என்ன வேலை, எங்கு இருக்கிறேன் எப்படியான உருவம்) முதல் சில வரிகளில் சொல்லிவிடுவார். இது வாசகனுக்கு கதை சொல்கிறவரை மனதில் வைத்துக்கொள்வதற்கான வசதி. சர்வோத்தமனின் கதைகளில் இந்த நடைமுறை இல்லை. கதைசொல்பவனின் சித்திரம் (அவனைப் பற்றிய குணவியல்புகள்) மெல்ல மெல்ல கதைகளில் சிதறலாக வருகிறது. அந்தச் சிதறல்களைச் சேகரித்து நாம் கதை சொல்லியை முழு வடிவமாக்கிக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது, கதை என்பது மெல்ல மெல்ல தன் மொழிப்படுத்தலில் வழியாக இயக்கப்பட்டு வெளிக்கொணரப்படும் ஒரு வஸ்து என்கிற ஓர்மையின்றி படைப்பூக்கத்தால் சிதைக்கப்படும் இந்த நிலையால் கதை ஒருவாறு உருவழிந்து போகிறது. ஒன்று, கதையை இம்மாதிரியான சிதறலான Obserditity களால் உருவாக்கலாம் அல்லது கதையை மொழிப்படுத்தலில் ஒழுங்கைக் கையாள்வதற்கு இசையலாம். ஆனால் சர்வோத்தமன் இந்த இரண்டையும் இணைக்க முயல்கிறாரோ என்று சந்தேகம் எழுகிறது. அப்படி இணைகிறபோது கதை தன்னை எதை நோக்கிச் செலுத்துகிறது என்பதை வாசகனால் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும்.
சிறுகதையைப் பொறுத்த வரை வாசகனுக்கு அதன் ஒவ்வொரு வரியும் தவறவிடக்கூடாதவை. மொழி வழியாக கதைக்குள் வாசகன் அனுமதிக்கப்படுகிறான். மொழியே அவனை இயக்குகிறது. மொழி என்பதை இங்கு கவித்துவ வர்ணனை என்று பொருள் கொள்ள வேண்டாம். சொற்கள் வழியாக மனவெளிக்குள் நிகழும் கலை. அதனால்தான் எழுத்து கலையில் மொழியே முதன்மை. சர்வோத்தமன் சடகோபனுக்கு நல்ல மொழி வாய்த்துவிட்டால் கதை தன்னை சரியான ஆரத்தில் பொருத்திக்கொண்டு சுழல ஆரம்பிக்கும்.
சடகோபனின் கதைகளை மூன்றாகப் பிரிக்க முடியும். ஒன்று, அன்றாட நிகழ்வுகளில் நடக்கும் யதார்த்த உலகையும் அதன் மனிதர்களின் மனவெளியையும் இதுவரைக்கும் எழுதப்பட்ட பழைய பாணியிலிருந்து விலகி குற்றவுணர்களை பிரதிபலிக்காத அதே சமயம் குற்றத்தை தனித்த குணமாகக் காட்டும் கதைகள்( பூதக்கண்ணாடி, நீலம், டிராகன்)
இரண்டாவது Psychotic depression ஐ கதையின் கருவுடன் இணைத்துக்கொள்ளும் கதைகள்
மூன்றாவது நாட்குறிப்புகளாக எழுதப்படும் சில. சவரக்கத்தி, ஷெனாய் கசிந்துகொண்டிருக்கிறது, உலவ ஒரு வெளி போன்றவை.
இந்த மூன்று வகைமைகளில்தான் சர்வோத்தமனின் கதைகள் இயங்குகின்றன. சர்வோத்தமனின் உலகம் கதை என்பதை ஸ்திரமாக நம்பும் வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையற்றது. கடிவாளமில்லாமல் சுதந்திரமாக மேய்ந்துகொண்டிருக்கும் அனாதரமான குதிரை அது.