Sunday, October 6, 2024

போகூழ் – இவ்வாழ்வை துரதிஷ்ட விதியின் கைகளில் ஒப்படைக்கிறோம்.

 

போகூழ்

 

போகூழ் என்றால் துரதிஷ்டம் பிடித்த விதி என்று அர்த்தம். தலைப்பு சமகால உலகத்திற்கு மிகவும் பொருத்தமானது. போகூழ் தொகுப்பின் அத்தனை கவிதைகளும் சமகாலப்போக்கை விசாரணை செய்கிறது. நிகழ்காலத்தின் அநித்தியத்தை எண்ணி கடந்தகாலத்தின் செழிப்பைச் சப்புக்கொட்டுவதோ, எதிர்காலத்தின் நல்கனவுகளுக்காக உறக்கத்தை ஏங்கிப் பார்ப்பதோ இல்லை இக்கவிதைகள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இதில் கடந்த காலத்தின் ஏக்கம் பற்றிய ஒரு கவிதைகூட கண்ணில் படவில்லை. ‘என் பால்யம் இப்படித்தான் களவாடப்படுகிறது“ என்கிற வரி வருகிற கவிதைகூட நிகழ்காலத்தின் போதாமைகளைதான் சாடுகிறது. வாழ்வு குறித்து விசனப்படுவதற்கு இங்கு எதுவுமே இல்லை. ஏக்கம் என்கிற சொல்லே காலாவதியாகிவிடுகிறது. தொழில்நுட்பங்களால் கட்டப்பட்ட சமூக அன்றாடங்களையோ கலாச்சார உருமாற்றத்தையோ இனி நாம் குறை பேச வேண்டியதில்லை.  இவை இக்கவிதைகளில் ஒரு பொருட்டே இல்லை. மேலும் இம்மாற்றங்கள் எந்த மந்திரக்கோலாலும் தட்டிவிட முடியாது என்பதும் காலத்தின் நிர்பந்தத்தின் கீழ் நிழற்தாங்கலாக நின்றுகொள்ளத்தான் முடியும் என்பதுதான் உண்மை. கவிதைசொல்லியின் விசாரணை, சமகாலத்தின் போக்கை கைவசப்படுத்தியிருக்கும் யாரோ ஒருவர் அல்ல அது உருவாக்கியிருக்கும் அபத்தங்களின் மேல். அதேசமயம் இந்த அபத்தங்கள் யாரையும் சீண்டுவதோ பகடி செய்வதோ முறையிடுவதோ இல்லை மாறாக எச்சரிக்கிறது. எச்சரிக்கையை வெவ்வேறு தொனியில் மறுபடியும் மறுபடியும் அழுத்தமாக்குகிறது. ஒவ்வொரு தொனியும் அபத்தங்களின் வேறு வேறு நிலைகளை காட்டுகிறது.

வேறு யாருடைய உடைமையையோ

பறித்துக்கொள்வதைத் தவிர வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள நமக்கு

நியாயமான தேர்வுகள் கிடையாது

சாணிப்போட்டுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது

சாணமள்ளிக்கொண்டிருக்க வேண்டும்

அதிகாரம் அவர்கள் கையிலிருக்கிறது

அது யாருடைய கையெனத் தெரிந்து மட்டும்

என்னவாகப்போகிறது

இந்த உலகம் அமைவுகளால் (patterns) ஆனது. சமூகத்தின் படிநிலைகள் முழுவதுமே அமைவுகளால் தொகுக்கப்பட்டுள்ளது. சிந்தனைகள் அமைவுகளாகத்தான் இன்று சிந்திக்கப்படுகின்றன. குற்றம்கூட அமைவுகளாக உள்ளன. அதற்கான தண்டனை பிறிதொரு அமைவாக இருக்கிறது. நமது சமகால ரசனை அமைவுகளால் உருவாகிறது. எளிமையான உதாரணம் ஒன்று, பிடித்த நிறத்தில் நாம் எடுக்க நினைக்கும் ஆடை ஒருவித அமைவை உருவாக்கியுள்ளது. அந்த நிறத்தில் குறிப்பிட்ட வகையில்தான் அந்த ஆடை வடிமைக்கப்படுகிறது. உங்களுக்கு நிறம் வேண்டுமென்றால் வடிவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். வடிவம் வேண்டுமென்றால் நிறத்தை துறக்க வேண்டும். இரண்டையும் விட்டு அடுத்த நிலைக்குச் சென்றால் அங்கு வேறொரு அமைவுகளின் கீழ் உங்கள் தேர்வுகள் உருவாக்கப்படும். தேர்வுகள் உங்கள் ரசனையைப் பொறுத்து அல்ல அவை அமைவுகளால் நிர்னயிக்கப்படுகிறது. அமைவுகளை நீங்கள் புறக்கணிக்க முடியாது. செய்தால், அமைவுகள் உங்களை அமைப்புகளிலிருந்து (Institutions) வெளியேற்றும். அமைப்புகள் உங்களை அடையாளங்களிலிருந்து வெளியேற்றும். அடையாளங்கள் உங்களை சமூகத்திலிருந்து வெளியேற்றி அகதியாக்கும்.

 

சிரிப்பதற்கு மாற்றான உலகில்

சிரித்தலொரு அநாகரீக செயலாகக் கருதப்படுகிறது

இதன்மூலம் யாரும் சிரிப்பை இழந்ததாக

அரசுக்கெதிராய் கிளர்ந்தெழமாட்டார்கள்

அப்புறமென்ன எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்

அதுவும் சாகும்வரை தொடைகளுக்கு இடையிலான உறுப்பு

எதற்கென்றே தெரியாமல்

சமூகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்பும் அர்த்தமிழக்கப்படுவதை அமைவுகளைத் துறந்த விதியை ருசிக்கிற ஒருவனால்தான் ஆண்மை காயடிக்கபடுவதை இப்படி சொல்ல முடியும். இந்த அமைவுகளாலான உலகத்தால் மனிதம் காயடிக்கப்படுவது வெவ்வேறு விதங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்னொரு கவிதையில் ”நிழலுக்கும் தூசி துடைத்து தரும்படி பணித்த வாழ்வு” குறித்து ஆரம்பிக்கும் கவிதைசொல்லி தான் காலங்கலமாக கைமாறிய அழுக்குத்துணியை கையில் வைத்திருக்கிறான். அவனுடைய வாழ்வின் அத்தனை தகுதிகளையும் சுழியத்துக்குக்கொண்டு வந்தாலும் அவனைத் தற்கொலைக்குத் தூண்டும் நிகழ்வையும் பொருட்படுத்தாமல்  அழுக்குத்துணி என்கிற நிதர்சனத்தைப் பற்றிக் கொண்டு சிம்மாசனத்தை அடைய முடியும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

 

2

தியாகராஜனின் கவிதைகளின் தனிச்சிறப்பு என்பது அவரை எந்த முன்னோடியின் வரிசையில் வைக்க முடியாததுதான். அவரது கவிதைகளில் இருக்கும் ”அரசியல் பாடுபொருள்” முதன்மையாக வைத்து தமிழ் கவிதைகளுக்கு வெளியே என்றால் ஆலன் கின்ஸ்பெர்க் ஞாபகத்து வருகிறார். முதலாளித்துவத்தையும் அதிகார வரக்கத்தையும் சனாதன வாதங்களையும் கடுமையாக எதிர்த்தவர் கின்ஸ்பெர்க். அவரது கவிதைகள் அரசியல்மயமாக்கலை திறமையாக பேசின. தியாகராஜன் கவிதைகள் அபத்தங்களை விசாரிப்பதன் முறையில், தமிழ் நவீன கவிதையில் ஆத்மாநாமை முழுமையாக தொடராவிட்டாலும் கொஞ்சமேனும் அவரது பாதிப்பில் வைக்கலாம். ஆனால் ஆத்மாநாமின் கவிதைளில் தொடரும் வாழ்வின் அபத்தங்களுடனான இறுதி நம்பிக்கைகளும் புன்னகைகளும் அமைதியும் நிம்மதியும் தியாகராஜனிடம் இல்லை. தியாகராஜனிடம் அபத்தங்களின் சுவை அபத்தத்தையே அடையாளப்படுத்துகிறது. நம்மிடம் கண்ணீரையும் மனதிடத்தையும் கோருவதில்லை. உதாரணத்திற்கு ஆத்மாநாமின் பூக்கள் கவிதை,

என்னுடைய வாகனம் வந்துவிட்டது /இடிபாடுகளுக்கிடையே /நானும் / ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன் / எங்கோ ஒரு இடத்தில் / நிலம் தகர்ந்து / கடல் கொந்தளித்தது / ஒரு பூ கீழே தவழ்ந்தது

இந்தக் கவிதை ஒரு அநாதரமான காட்சியை ஏற்படுத்துகிறது. வாழ்வின் பிடி சரிந்து விழுகிறது. ஆனால் கவிதையின் இறுதியில் ஒருவித ஆன்மசுத்தத்தை நாம் உணரலாம். அதன் கடைசி வரி நம்மை பௌதீக உலகின் அத்தனை அபத்தங்களையும் தலைகீழாக்க முயற்சிக்கும். அத்தனை குரூரங்களையும் நல்ஊழாக்கிப் பார்க்க முயன்றவை. அவரது கவிதைகளில் வருகின்ற பறவைகள், பூக்கள், மனிதம் அல்லாத மற்றமை என அனைத்தையும் அபத்தவாழ்வை மீளிணக்கச் செய்யும் வஸ்துக்களாக மாற்ற முயன்றதாகவும் நம்மால் வாசிக்க முடியும்.

கிட்டத்தட்ட இதே மாதிரியான மனநிலையை உருவாக்கும் தியாகராஜனின் கவிதை ஒன்று கீழே

கண்ணாடி சன்னல்கள் உடைந்திருக்கின்றன/ மேற்கூரைகள் பாதியைக் காணவில்லை/ எரிந்துபோன சுவரில் கவியும் நிழல்கள்/ இன்னும் அச்சமூட்டுகின்றன/ பார்த்து பார்த்து கட்டிய உத்தரம் இப்போது பாதி மீந்திருக்கிறது/ ஏதோ விபரீதம் நடந்த வீட்டில் யாரும் மிஞ்சினார்களா/ என்பது தெரியவில்லை/ சில சாதாரணப் புற்கள் மண்டிக்கிடக்கச் சில ஜந்துகள்/ அதனை வாழிடமாகக் கொண்டுள்ளன/ அதுவொரு ஆசையின் சாட்சியமாகிவிட்டது/ இப்போது சாட்சியங்களை அழிப்பதால் மட்டும்/ அந்தக் கண்ணாடி ஜன்னலுக்கு வசந்தங்கள்/ திரும்பப் போவதில்லை/ அங்கே ஒரு வௌவால் தொங்குவது/ தொங்கியதுதான்

இந்தக் கவிதையில் “ஏதோ விபரீதம் நடந்த” என்கிற வரி அங்கு நடந்தக் காட்சியைக் காட்டிவிட்டு அதை ஏற்படுத்திய காரணியை “தெரியவில்லை” என்று விலகிக்கொள்கிறது. கூடவே “அதுவொரு ஆசையின் சாட்சியமாகிவிட்டது” என்பதும் அவற்றை அழிப்பதால் “வசந்தங்கள் திரும்பப் போவதிலலை” என்கிற தீர்மானத்தையும் சொல்லிவிடுகிறது. இப்போது அந்தச் சாட்சியத்தில் ஒரு வௌவால் தொங்குவது “தொங்கியதுதான்” என்ற வரியை அழுத்தமாகி அது இனி என்றைக்குமே மாற்றவியலாத வாழ்வின் விதி என நமக்கு அர்த்தப்படுத்துகிறது. இந்தக் கடைசி வரியில்தான் ஆத்மாநாமின் மனித உணர்வுகளுக்கு வெளியே எழுகிற எதிரொலிப்புக்கும் தியாகராஜனின் கவிதைசொல்லி வாழ்வை குறைபட்ட மற்றமையாகக் கட்டமைப்பதையும் புரிந்துகொள்ளலாம். அதாவது, இருவேறு கவிதைசொல்லிகளின் வாழ்வு அபத்தங்கள் குறித்த பார்வை எவ்வளவு சரியான புள்ளியில் விரிந்து துலக்கமாகிறது என்பது தெரிகிறது. இன்னும் ஆத்மாநாமின் ஒன்றிரண்டு கவிதைகளையும் (அவசரம், சுதந்திரம், ஏதாவது செய்) தியாகராஜனின் கவிதைகளுடன் வைத்து பார்க்கலாம். ஆனால், இரு கவிகைசொல்லிகளையும் ஒப்பிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. நவீன கவிதையின் முன்னோடியின் கவிதைசொல்லி எங்கு இதில் வெளிப்பட்டு விலகிக்கொள்கிறாரென்கிற சிறிய நினைவூட்டலுக்காகத்தான்.,

தியாகராஜனின் கவிதைகளில் படிமம் இல்லை. அவருக்குச் சொல்வதற்கு படிமங்கள் தேவைப்படுவதில்லை. மாறாக, பொருண்மையை எண்ணத்திற்குத் திருப்புகிறார். உரையாடல்கள் வடிவங்களுடன் பதிலாக வடிவமற்றதுடன் நடக்கிறது.

இத்தொகுப்பில் எந்தக் கவிதைக்கும் தலைப்பு கிடையாது. ஒருசில தலைப்புகளில் கீழ் அந்தக் கவிதைகளின் மனவுலகம் தொகுக்கப்பட்டிருக்கிறது. இக்கவிதைகளின் இறுக்கமும் பாடுபொருள்களும் வழக்கமான முதல் தொகுப்புக்குரிய “சமூகமீறல்,  கோபம், சாடல், எள்ளல், காலவிலகல், மன்னிப்பு, குற்றம்கடிதல் ” போன்ற குணங்களிலிருந்து முற்றிலும் தனித்திருக்கின்றன. முழுக்க முழுக்க வாழ்வின் அனைத்திற்குமான உணர்வுகளை அதன் உணர்ச்சியற்ற அகவலிலிருந்து பாட யத்தனிக்கின்றன. சிறுபத்திரிக்கைக் கவிதைகள். ஒன்றுகூட பொதுமையப் பார்வையிலான உலகை உருவாக்கும் காரணிகளுக்கு அருகில் இல்லாதவை. சுயத்தை மதிப்பீடு செய்வதிலும் அதன் விலகலுக்கானக் காரணத்தை அறிவதிலும் உலன்றுகொண்டிருப்பவை. ஆதலாலே இந்த வாழ்விற்கு துரதிஷ்டம் பிடித்த விதியின் பெயரைச் சூட்டிக்கொண்டு கோபமான சிறுவனாக நம் முன் நிற்கிறது இந்நூல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *