பழைய குருடிக்குள் இருக்கும் புதிய குருடி
ஒரு புதிய தொகுப்பை வாசிப்பதற்கு வாசகனின் நேர்மை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அக்கதை சொல்லிக்கும் பங்கு இருக்கிறது. கதைசொல்லியும் வாசகனும் வேறு வேறு மனநிலைகளில் ஒரு பயணத்தில் இணையும் சாத்தியங்கள் அரிதினும் அரிது. நிச்சயம் ஒரு வாசகன் புத்தகத்தை எடுக்கிறபோது அது தனது உலகமாக மாறும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். அப்படியான படைப்புகளைத் தேடித்தான் அவனது வாசிப்பும் அமையும். கதை எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் புதிய உத்திகள் அதற்கு இருக்கலாம், புதிய களங்களை அது காட்டலாம், புதிய கதைகூறல் அதில் நிகழ்ந்திருக்கலாம் எல்லாவற்றையும்விட அது வாசகனுக்கு எந்த வகையில் அனுக்கமாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். வடிவமோ உத்தியோ களங்களோ நிச்சயம் வாசகனின் உணர்வோடு சங்கமிப்பதில்லை. டீஷர்ட் எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்திருக்கலாம் அதை அணிகிறபோது ஒரு உணர்வை அது ஏற்படுத்துவது அவசியம். ஒரு தேநீர்நிலையத்துக்குள் நுழைகிறபோது நாம் எதையும் ஆர்டர் பண்ணாமலேயே திரும்பிவிடலாம் அது முக்கியமில்லை அந்த தேநீர் நிலையம் நமக்கு எத்தகைய உணர்வை அங்கு அமர்ந்திருக்கையில் அளிக்கிறது என்பது முக்கியம். நீங்கள் தேநீரை பருகாமலேயே அதன் சூழல் உங்களுக்கு ஒரு புத்துணர்வை அளிக்கும். அதுபோலத்தான் நான் இந்த உத்திகளையும் கதையையும் பார்க்கிறேன்.
முரகாமியின் killing commendatore இருந்து ஷோப சக்தியின் ஸலாம் அலைக் வரை வெறும் உத்திகளால் மட்டுமே தங்களை நிறுவிக்கொள்ள முயன்று வாசகனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட படைப்புகள் நிறைய இருக்கின்றன. இதில் வாசனும் கதைசொல்லியும் ஒரே சாலையில் பயணித்தும் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே பயணத்தை முடித்தவர்கள். மூத்த எழுத்தாளர்களிடம் சொல்வதற்குக் கதைகள் தீர்ந்துபோனதும் உத்திகளை எடுத்துக்கொண்டு ஏற்கெனவே சொன்னக் கதையை மறுபடியும் புதிய உத்திகளில் ஆரம்பிப்பார்கள். புதிய தத்துவங்களாலும் சிந்தனைகளாலும் பின்நவீன கோட்பாடுகளாலும் அதை அழகுபடுத்தி விடுவார்கள். புதிய எழுத்தாளர்களுக்கு அப்படியொரு அவசரம் தேவையில்லை. அவர்களுக்கு சொல்ல வேண்டிய கதையைப் பற்றிய அளவீடு வேண்டியதில்லை. அதற்குரிய சமூக நெறி முறைகளின் ஒழுங்குகள் தேவையற்றது. சொல்லப்போனால் அதன் களம் Raw கவும் ஆனால் அதன் பார்வை புதியதாகவும், செதுக்கப்பட்ட, கூர்மையான கத்திபோல இருக்க வேண்டும்.
ராஜனின் கதைகள் நல்ல வேளையாக முழுக்க முழுக்க உத்தி சார்ந்து இயங்கவில்லை. ஆனால் ஏதோவொரு இடத்தில் அதை அழுத்தமாக நம்புகிறோதோ என்கிற ஐயம் தெரிகிறது. அதே நேரம் கதைகளுக்குள் பயணிக்கும் கதைசொல்லியின் பார்வை என்கிற புதிய கோணம் இருக்கிறதா அல்லது அது தெளிவாகப் புலப்படவில்லையா என்று தெரியவில்லை. காரணம் கதைசொல்லி தன் பார்வையில் ஏற்கெனவே அனுபவித்த சமூகச் சிக்கல்களை என்ன தீர்வை தான் சொல்லப்போகிறோம் என்று கூற தவறவிட்டுவிட்டு அந்தச் சிக்கலைத் திரும்பவும் வெளிக்கொணரும் வேகத்தில் இருக்கிறான்.
வின்சென்டின் அறை, அரூபி மாதிரி கதைகளில் அது தெளிவாகத் தெரிகிறது. பழைய குருடி என்கிற தலைப்பு கதைகூட சமூக பிரச்சனையை பேசுவதற்கு முயன்று தோல்வியுற்ற ஒன்றுதான். அந்தக் கதைக்கு ஒரு முன்கதை ஒன்று “இது கதை பேசுவது வேற விசயம்” என்கிற டிஸ்கிரிப்ஷன் மாதிரி இருக்கிறது. அறிவுஜீவியின் பொய் கதையில் மட்டுமே கதைசொல்லி இந்த சமகாலத்தின்மீது புதிய பார்வையை வைக்க யத்தனிக்கிறான். அவனது புரிதல் அபாரமானது. ஆதிக்க அரசியல் எப்படி வரலாற்றை மாற்றி வைத்திருக்கிறது என்பதை அடுக்கடுக்காகக் களைய முயற்சிக்கும் கதை. ஆனால் அதிலும் கதைசொல்லியின் குரலை நெறிக்கும்படியான உத்தி மேலோங்கி நிற்கிறது. அதிலிருந்து கதை வெளியே எடுத்து புரிந்துகொள்ள பிரம்ம பிரயத்தம் செய்ய வேண்டி இருக்கு.
ராஜனின் கதைசொல்லி முதல் கதையான பாலூட்டிகளில் இருக்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமான அடுத்த கதைகளுக்குள் அவன் மெல்ல உலக இலக்கிய உத்திகளாலும் சமூக அரசியல் கோட்பாடுகளாலும் காணாமல் போகிறான். அவன் சொற்ப கணத்தில்தான் மற்ற கதைகளில் வாசகனுடன் சந்தித்துவிட்டு வெறியேறி விடுகிறான். அவனக்கு வாசகனிடம் கூற வேண்டிய கதை நிறைய உள்ளது வாசகனும் கேட்க தயாராகவே இருக்கிறான். ராஜன்தான் அக்கதைசொல்லியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.