Monday, April 15, 2024

பழைய குருடி- கதைகளில் பெண்கள்

பழைய குருடி- கதைகளில் பெண்கள்

காஞ்சனா                                                             

இது எழுத்தாளர் த.ராஜனின் முதல் தொகுப்பு. சென்ற வருடமே இப்புத்தகம் வந்துவிட்டது. அறிமுக எழுத்தாளரின் புத்தகங்கள் பெரும்பாலும் நம்மை எழுத வைத்துவிடுவதில்லை. ராஜனின் பழைய குருடி நம்மை சமகால உலகுடன் அசைபோட வைக்கிறது. முதல் தொகுப்புக்கான எந்த தடுமாற்றமும் இல்லை. மிகத் தேர்ந்த கதை சொல்லல். எல்லா கதைகளும் குறுநாவல் அளவுக்கு பெரியவை. பொதுவாக மிகப் பெரிய கதைகளை நான் வாசிக்க சற்று தயங்குவேன். பழைய குருடியின் முதல் கதை பாலூட்டிகள் என்னை மிக நெருக்கமாக உணர வைத்தது. எங்கள் குடும்பத்தில் நடந்து சம்பவத்தை அப்படியே திரும்ப உயிரும் சதையுமாக கண்டது போல் இருந்தது. தொகுப்பின் மற்ற கதைகளையும் வைக்காமல் வாசித்து முடித்தபோது இந்த கதைகளுக்குள் இருக்கிற பெண்களின் இயல்புகளை மட்டும் வைத்து ஒவ்வொரு உலகையும் புரிந்துகொள்ளலாம் என்று தோன்றியது.

செல்லத்தாயி

தன் கணவன் இறந்துவிட்டதை நம்ப மறுக்கும் செல்லத்தாயின் போராட்டத்துடன் பாலூட்டிகள் கதை தொடங்குகிறது. செல்லத்தாயின் கணவன் பட்சிகளோடு புழங்கியவர், வௌவால் தாத்தா என்று அவருக்குப் பெயர். வௌவால்கள் குகை அழிக்கப்பட்டதற்குப் பின் அவர் காணாமல் போகிறார். அவரது இன்மையை நம்ப மறுக்கும் செல்லத்தாயி தன் மகள் வழி பேரன் சின்னத்துரையிடம் அதைக் கண்டுகொள்கிறாள். அவனுக்கு வரும் கனவுகளுக்குள் தன் கணவன் இருக்கிறான் என்பது செல்லத்தாயிக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஒருமுறை தன் கனவை அவளிடம் விவரிக்கையில் செல்லத்தாயிக்கு உள்ளுக்குள் பீதி சூல் கொள்கிறது. அதேபோல் சின்னத்துரைக்கும்  பேச்சு வருவதுகூட மிகப்பெரிய வௌவால் ஒன்றைப் பார்க்கிறபோதுதான் நடக்கிறது. ஆனால் வெகுகாலத்திற்குப்பிறகு சின்னத்துரை வளர்ந்து பெரியவானக ஆனபின் தன் கனவுக்குள் இருக்கும் கந்தையனின் மேட்டுக்குப்பம் இதுதான் என்று சொல்லும்போது செல்லத்தாயி நம்ப மறுக்கிறாள். செல்லத்தாயிக்கு கந்தையனின் இருப்பை கண்டுவிட்ட பிறகு சின்னத்துரையும் கந்தையனைப் போன்று மாறிவிடுவானோ என்கிற அச்சம் இருக்கிறது. ஆனால் சின்னத்துரை பாட்டியை எப்படியோ இணங்க வைத்து மேட்டுக்குப்பம் கதையையும் கந்தையனையும் மீளுருவாக்கம் செய்கிறான். கந்தையனின் உலகை அவன் கண்டுகொண்ட அடுத்த கணம் கதை அவனது அன்னபாக்கியத்தின்மீது நகர ஆரம்பிக்கிறது. அன்னபாக்கியம் நகர வாழ்க்கைக்குரிய பெண். பல்லி பூச்சிகளை விரும்பாதவள். சின்னத்துரையின் கற்பனையில் இருக்கும் கந்தையனின் உலகிற்கு அவளால் வர முடியாது. அவள் பிரசவத்திற்கு தாய்வீடு சென்றபிறகு சின்னத்துரையின் பொழுதுகள் கந்தையனின் கதைகளுக்குள் தொலைகின்றன. வௌவால் அங்கு மறுபடியும் நுழைகிறது.

இரு வேறு பெண்கள் இந்தக் கதையில் வருகிறார்கள். இருவருமே எதிர் எதிர் மனநிலையில் தங்களை சூழலிலிருந்து வெளியேற்றிக்கொள்ள போராடுகிறார்கள்.

ஜானகி

வின்சென்ட் என்கிற திருநங்கையாக மாறிக்கொண்டிருக்கும் ஒருவனின் கதை இது. இந்தக் கதையில் வின்சென்ட்டின் வாழ்க்கையை வேறொருவன் கதையாகச் சொல்ல இன்னொருவன் –அது நாமாக இருக்கிறோம் – கேட்பதாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கதைக்குள் ஜானகி என்கிற வின்சென்ட்டின் தோழி வருகிறாள். வின்சென்ட் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆண் தன்மையிலிருந்து வெளியேறி பெண் தன்மைக்கு மாறுகிற இக்கட்டான உயிரியல், உளவியல் மாற்றத் தருணத்தில் அவளைச் சந்திக்கிறான். ஜானகி அவனை திரும்பவும் ஆணுக்குள் திருப்பும் பிரயத்தனங்களில் ஈடுபடுகிறாள். ஆனால் வின்சென்ட் மாறாக ஜானகி வழியாகவே தன் பெண்மையை அகத்தூண்டல்கள் வழி பெற்றெடுத்து வருகிறான். ஜானகியால் அவனது ஆண்மையை வெறும் பௌதிக உணர்வுகளால் ஒழிய அதைத் தீண்ட முடிந்தது. ஆனால் வின்சென்ட் ஜானகியிடம் இருந்து அவளுடைய இன்மையை மொத்தமாக தன் ஆன்மீக உணர்வுகளுக்குள் பொருத்திக் கொண்டு முழு பெண்மையைப் பெற்றுவிடுகிறான். அவர்களது நட்பு வெளியே தெரிந்து விலகிப்போகிறது. ஆனால் வின்சென்ட்டின் பெண்மைக்கு நெருக்கத்தில் ஜானகி இருந்துகொண்டே இருக்கிறாள் Invisible ஆக. இந்தக் கதையைச் சொல்லும் இரண்டாவது கதைசொல்லியாகி நண்பன் ஒருமுறை வின்சென்ட்டின் பைத்திய கணங்களுக்குள்  நுழைகிறபோது அவன் வின்சென்ட்டின் உடலைத் தீண்டுவது மூலம் ஜானகியை பலாத்காரம் செய்வதுதான் வின்சென்ட்டின் ஆங்காரமான கோபத்தின் வெளிப்பாடு. இது ஒருவகை Horror தன்மையிலான கதை.

அன்னபாக்கியம்

பழைய குருடி கதையில் வரும் அன்னபாக்கியம்  சாதாரண நகரத்து ஜன நெருக்கடிக்குள் வாழ்க்கையை ஓட்டுகிற இயல்பான கதாப்பாத்திரம். பழைய குருடி கதையில் அவளது கணவன் சின்னத்துரைதான் முதன்மை பாத்திரம் என்றாலும் அன்னபாக்கியமே அவனை நகர்த்தும் புற உலக அழுத்தம். வீட்டிற்குள் எலி புகுந்துகொண்டதும் அவள்தான் அவனை எலிமீதான வெறுப்பை உருவாக்குகிறாள். எலி மருந்து வாங்கி வரச் சொல்லி அவனை விரட்டுவதும், “உங்கள யாரு வெளில போகச்சொன்னது? முக்குல என்ன எலியப் பிடிக்காம விட்டுட்டு என்கிட்ட ஏன் டுண்ட்றீங்க?” “புலம்பி ஒன்னும் ஆகப்போறதில்ல எலிப்பத்தியம் வாங்கிட்டு வாஙக”  “எம்மாம் பெரிய எலின்னு பாத்த அப்புறமும் இந்த அட்டையப் போய் வாங்கிட்டு வந்திருக்கீங்களே கொஞ்சமாவது கூறு இருக்கா?” இந்த மாதிரியான கேள்விகளால அவனது சுயத்தை அநாதரமான ஒரு புறச்சூழலுக்குள் தள்ளிவிடுகிறாள். அன்னபாக்கியம் அவனது அவஸ்த்தைகளுக்கு எதிரானவளாக, ஆனால் வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவளாக வருகிறாள்.

மனோகரி – ரஞ்சிதம்

அரூபி கதை மனோகரி, ரஞ்சிதம் என்கிற இரு பெண்களின் அக உலகை விவரிக்கிறது. பிற்போக்கு மனநிலை குடும்பத்துக்குள் சிக்கிக்கொள்ளும் ரஞ்சிதத்தின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போவதை ஒரு நாவலின் தீட்டப்பட்டிருக்கும் அழுத்தத்துடன் நம்மை பயணிக்க வைத்திருக்கிறது அரூபி கதை. ரஞ்சிதத்தின் ஒவ்வொரு உரையாடல்களிலும் இன்றைக்கு நடுத்தர வயது பெண்களின் மௌன வலிகளை நம்மால் உணர முடியும். பிற்போக்குக் குடும்பத்திலிருந்து வெளியேற முடியாமல் இறுதியில் பெண்ணின் பலம் இன்னொரு பெண்ணாலயே பலகீனப்பட்டு உருவழிகிறது. அதற்கு பதிலியாக ரஞ்சிதம் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை தன்னை தீயில் மாய்த்துக்கொள்ளும் உருவ அழிப்பு. ரஞ்சிதத்தின் தற்கொலை அவஸ்தையாக முடியவில்லை ஒரு போராட்டத்தின் தீவிரத்துடன் முடிகிறது. அவளது தற்கொலையைப் பார்த்தவர்கள்

“கொளுத்திட்டு வெளிய வந்தவ அப்படியே அமைதியா உக்காந்துட்டா. சின்ன சத்தம் இல்லயே லேசா எண்ணைப் பட்டாலே துடிச்சுப் போயிட்றோம் எப்படி இப்படிச் சத்தமில்லாம இருந்தாளே தெரியல மனசு அப்படியாப்பா கல்லா போயிருக்கும்” என்று பேசிக்கொள்கிறார்கள். துர்க்கையின் வடிவில் ரஞ்சிதம் தழலை உண்டு அடங்குகிறாள். அவளது வைராக்கியம் அனலாக பரவுகிறது. மகள் மனோகரி பார்க்கும் கடைசி முகம் அம்மாவின் அக்கரிய உடலைத்தான். அவள் கடைசியாக உதிர்க்கும் வார்த்தை “அழாதம்மா தங்கம்”

அதிலிருந்து மனோகரியின் மனதை ரஞ்சிதத்தின் கருமை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது. கருமை போராட்டத்தின் நிறம். உடல் வலிமையின் நிறம். ரஞ்சிதத்தின் நிராசைகளெல்லாம் மனோகரியின் மூலம் பூர்த்தியாகின்றன. மனோகரியின் வாழ்க்கை ரஞ்சிதத்தால் நிகழ்கிறது. உயிர்த்தேனின் செங்கம்மாவைப் போன்று கட்டுப்பாடுகளை ரஞ்சிதம் மீறத் துணிகிறாள். மனோகரி நிழலாக ரஞ்சிதத்தின் வாழ்வை நிர்ணயிக்கிறாள். நினைவுகளுக்கும் யதார்த்ததிற்குமாக ரஞ்சிதத்தின் மனம் சஞ்சரிக்கிறது. ஒரு வகையில் மனோகரி பெண் தெய்வத்தைப் போன்று நமக்கு தெரிகிறாள்.

ரஞ்சிதம்

காந்திக்கும் காந்தியின் வலது கையான தேசாய்க்கும் காந்தியவாதியான பலராமனுக்குமாக கதை முன்னும் பின்னுமாக நகர்த்தப்படும்  கடைசி கதையான அறிவுஜீவியின் பொய் முழுக்க முழுக்க Political Intellectual யின் சாமானிய மனைவிக்கு நிகழ்கிற வரலாற்று குழப்பத்தை அடிப்படையான கதை. ஒருவகையில் அந்த சாமானியப் பெண்ணை இந்த சமூகத்தின் Depolitcal Self என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். அந்த சுயத்தின் அரசியல் உணர்வை இன்னொரு அறிவுஜீவியால் முடிவு செய்யப்படுகிறது. அந்த அறிவுஜீவி கூறும் வரலாற்றைத்தான் அப்பொது சுயம் புரிந்துகொள்கிறது.  ரஞ்சிதம் அப்படிபட்டவள்தான்.

ராஜனின் கதைகளில் பெண்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தங்களது ஒடுக்கப்படுதலிலிருந்து வெளியேற யத்தனிக்கும் கற்பனாதீத ஆத்மாக்கள். ரஞ்சிதம், மனோகரி போன்ற வெகுளித்தனத்திலும் அவர்களால் இந்த யதார்த்த உலகின் ஆதிக்க மனோபாவங்களைக் கண்டுகொள்ள முடிகிறது. ராஜன் இப்பெண்களின் வெளியேற்றத்தின் வழியாக யதார்த்த உலகிலிருந்து அவர்களை விடுதலை செய்ய முயற்சிக்கிறார்.                                           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *