அருண் பிரசாத்
The main battle in imperialism is over land, of course, but when it came to who owned the land, who had the right to settle and work on it, who kept it going, who won it back, and who now plans its future- these issues were reflected, contested, and even for a time decided in narrative. – Edward Said
இதுவரை எழுதப்பட்ட போர் இலக்கியம் சார்ந்த ஈழப்பிரதிகளிலிருந்து நகுலாத்தை முற்றிலும் வேறுபடுகிறது. அதற்குக் காரணம் நகுலாத்தை “கதை” என எதை முன்னிறுத்திக் கொள்கிறது என்பது இங்கு முக்கியம். ஒரு தலித்திலக்கியப் பிரதி எப்படி ஒடுக்கப்படுதலைப் பேசாமல் விட முடியாதோ அப்படித்தான் ஈழ இலக்கியங்களில் போரும். ஆனால் நகுலாத்தையில் பேசப்படும் போர் “ஒடுக்கப்படுதலின் கதை” என்கிற பிரதான களத்திலிருந்து வெளியேறி விடுகிறது. அதே சமயம் நகுலாத்தையை போர் சம்பந்தமற்ற கதை என்றும் சொல்லிவிட முடியாது. போரும் ஒடுக்குதலும் கீரிப்பிள்ளை மேடு வாழ்க்கையை எப்படி இடம் பெயர்த்துகிறது என்று ஒற்றை வரியில் நகுலாத்தைப் புதினத்தை வரையறுப்பதும் சிரமம்தான்.
நகுலாத்தையின் தொன்ம கதைகளும் மனிதர்களின் வாழ்வும்
-
- நகுலாத்தையில் கீரிக்குளம் பிரதானமானத் தொன்மக் கதையாக இருக்கிறபோதும், அம்மாகண், காக்தை வதனன், ஊத்தை குடியன், சொத்தி வன்னியன் என வெவ்வேறு தொன்மங்கள் அதைச்சுற்றி படலங்களாக விரிந்துள்ளன.
-
- தாமரை – வெரோனிகா இந்த இருவர்தான் முதன்மை கதாப்பாத்திரங்கள் என்றாலும் (நகுலாத்தையின் முதன்மை கதைமாந்தர்கள் பெண்கள் மட்டுமே) சின்ராசன்-துரிதம்- காங்கேசன், நிர்மலா – புலேந்திரன் எனக் கிளைக் கதைகளும் அன்னம்மாள், மார்க்கண்டய தாத்தா, கண்ணன், தமயத்தி, சாரங்கள் என சின்னஞ்சிறிய நிகழ்வுகளும் நகுலாத்தை நாவலில் நிறைந்திருக்கின்றன.
அதாவது நாவலின் கட்டமைப்பில் தொன்மக் கதைகளும் நிகழ்காலக் கதைகளும் ஒன்றையொன்று பின்னிக்கொள்கின்றன. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், யதார்த்தத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் கடந்தகாலத்தின் தொன்மங்களுடன் இணைத்தே சொல்லப்படுகின்றன.
உதாணரத்திற்கு, பாம்பு தீண்டிய ஆளைக் காப்பாற்ற ஆச்சியும் தாமரையும் விரைகிற இடத்தில் கீறிமேடுக்குள் இப்போது அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக ஆச்சியிடம் மக்கள் விசனப்படுவதைத் தங்களது நிலம் அழியப்படுவதை உணர்த்துகிறது. ஆச்சி நடப்பவற்றை எல்லாம் தொகுத்துச் செய்தியாகப் பார்க்கிறாள், ஆதியில் சொன்ன கதைகள், கொண்ட பலிகள் கொஞ்சமில்லை என்பதை அவள் நன்கறிவாள். கதைகள் உடலுக்குள் தங்கியிருந்தன. நம்பிக்கையும் விசுவாசமுமே தெய்வங்களைச் சமநிலையில் வைத்திருக்குமென்பாள் (பக் 87)
கீரிக்குளம் முழுக்க முழுக்க ஆத்தை தெய்வத்திற்குக் கட்டுபட்டிருக்கிறது. எப்படி அங்குப் பாம்புகள் புழங்காது என்கிற நம்பிக்கை உள்ளதோ அப்படித்தான் ஆத்தை வளவைத் தாண்டி ஆமி வந்துவிடாது என்கிற நம்பிக்கையும் (பக் 439ல்). அதே சமயம் ஆத்தை வளைவில் திருவிழா நடைபெறுவதையும் இயக்கம் விரும்பவில்லை. கதை எந்தப் புள்ளியிலும் இயக்கத்தின் பார்வையிலிருந்து சொல்லப்படவில்லை என்பதும் கீறிமேடு மக்கள் இயக்கத்தால் ஆள்பிடிக்கப்பட்டதற்குப் பின்பு கீரிக்குளம் கானல் நதியாக அதன் பார்வையிலிருந்து விலகிவிடுவதும் தன்னியல்பாக நடக்கிறது
ஆமி < இயக்கம் < கீரிக்குளம் மக்கள் < கீரிக்குளம்
“டீச்சர் வந்து ஒரே அழுகை. சாரங்கனை பிடிக்க ரெண்டுதரம் வந்திட்டாங்களாம். சொந்தாகார வீடுகளுக்கும் போறாங்களாம். அதுதான் கொஞ்ச நாளைக்கு அவரை இஞ்ச வச்சிருக்க ஏலுமோ எண்டு கேட்டவா. (பக் 143). இயக்கத்தின் பிள்ளைபிடிகாரர்களைக் கண்டு கீரிக்குளம் மக்கள் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.
இயக்கத்தின் ஆட்கள் மக்களைத் துன்புறுத்துவது (உன் பிள்ளை என்றால் நிரூபிக்க பால் கொடு, சின்னச் சின்ன பெடியள்கள் ஏ எல் முடிக்காதவர்களைப் பயிற்சிகூடக் கற்காதவர்கள் துவக்குடன் சண்டைக்கு நிற்பது) எனக் கதை முழுக்க மக்கள் இயக்கத்திடமிருந்து தப்பிக்கிறார்கள்.
இன்னொரு புறம் அப்படி இயக்கத்துக்குப் போவதைப் பற்றிய விவாதமும் கீரிக்குளம் மக்களிடம் இருக்கிறது.
“போகத்தானே வேணும் சுதந்திரம் சும்மா வருமோ?” (பக் 133)
சின்னப் பெடியள்களைப் பிடித்துக்கொண்டு போவததைப் பற்றிய விவாதத்திலும், வல்லி, வெரோனிகா, சாரங்கன் பிடிபடுகிற சம்பவங்களிலும் ஆள்பிடிப்பதில் இளம் தலைமுறையினருக்கு உவப்பில்லை என்பதும் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதைத் தப்பில்லையென மறுப்பதையும் நம்மால் வாசிக்க முடிகிறது.
விடுதலைப் போராட்டத்தில் இறந்த மாவீரர் குடும்பங்களிலிருந்து இளைஞர்களையோ யுவதிகளையோ பிடிப்பதில்லை. பின்னர் சில இடங்களில் அதுவும் நடந்தது (பக் 344). இவ்வாறு பிள்ளைப் பிடிப்பதில் இயக்கம் காட்டும் அறமீறல்கள் கதை முழுக்க நிகழ்கின்றன. இதே இயக்கம் தாமரை இணைந்ததற்குப் பிறகு, இராணுவ உடலொன்றை காலால் உதைத்ததற்குத் தண்டணை வழங்கப்படுகிற இடத்தில், தாமரை “அப்ப விருப்பமில்லாமல் பிடிச்சுக்கொண்டு வந்து இயக்கத்திலை சேர்த்தது எந்த மானுட அறத்தில் வரும்?” என்கிற குரல் எழுகிறது. இயக்கத்தின் அறமதிப்புமீதான தர்க்கங்கள் எவ்வளவு முரணாக இருந்திருக்க வேண்டும் என்பது நிலத்தையும் வாழ்வையும் காப்பாற்ற முயலும் மக்களிடம் புரிந்துகொள்ள முடிகிறது.
இயக்கத்தின் அரசியலில் இருக்கும் மிகப்பெரிய முரண்நகையே ஆமி நிலத்தைக் கைப்பற்ற என்ன செய்துகொண்டிருக்கிறதோ அதே செயலை, வேறு விதத்தில் (பிள்ளை பிடிப்பது, விதிவிலக்குகளை அழிப்பது) இயக்கமும் செய்கிறது. நகுலாத்தையின் கதை இந்தத் தலைகீழ் வடிவத்தைத்தான் நமக்குக் கதையாடலில் சொல்கிறது.
சாகஸம் செய்யக்கூடிய எந்தக் கதாபாத்திரமும் நகுலாத்தையில் இல்லை. தாமரை, வெரோனிகா இந்த இரு பெண்களின் வாழ்வும் இயக்கத்தால் பிடிபட்டு தன் நிலத்தின்மீதான எதிர்காலக் கற்பனையை இழப்பதுதான் நகுலாத்தை சொல்ல முயன்றுள்ளது. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இயக்கத்தால் பிடிபடுகிற இதே பெண்களால்தான் (இதுபோன் பல பேர்களும்) எதிர்கால நிலமும் கண்முன்னே இழக்கப்படுகிறது. நகுலாத்தையின் கதை இரண்டு தரப்பு உரையாடல்களை மட்டுமே தன் கதைப்பரப்பில் எழுப்புகிறது. ஒன்று, நகுலாத்தை என்கிற கிராமத்தின் நம்பிக்கையும் வாழ்வும் இரண்டாவது, இயக்கத்திற்கு அஞ்சி ஒளியும் மக்களின் ஓட்டம். இந்த இரண்டு உரையாடல்கள் அன்றி, கதைப்பரப்பில் ஆமி மீதான உரையாடல் சொற்ப அளவில்தான் உள்ளது.
காங்கேசன் துரிதம், தமயந்தி, சின்ராசன், ஆச்சி எனக் கிளைக்கதைகள் நிறைய இருந்தாலும், தாமரைதான் கதையின் பிரதானப் பாத்திரமாக வருகிறாள். தாமரைக்கும் ஆச்சிக்குமான உறவு அதில் முக்கியம். தாமரைக்கு ஆச்சியின் மனதில் என்ன இருக்கிறது என்று நன்றாகத் தெரியும். குறி சொல்வது, விஷம் பார்ப்பது என்று அனைத்துக்கும் தாமரை ஆச்சியின்கூடவே இருக்கிறாள். ஆத்தைவளவில் ஆச்சிக்குப் பிறகு தாமரைதான் என்பதாகப் பல சம்பவங்கள் நமக்குக் காட்டப்படுகிறது (பக் 84). அது மட்டுமில்லாமல் தாமரை இயக்கத்துக்குப் போவதற்கு முன்புகூட இயக்கப் பெண்களுக்கு உடல் நலமில்லாமல்போகும்போது ஊத்தைக்குடியன் இறங்கியிருப்பதாகப் பார்க்கிறாள். தாமரை இயக்கத்தோடு போன பின் ஆச்சியின் குரல் தோய்வடைய ஆரம்பிக்கிறது. தாமரை கிளம்பியததிலிருந்து மூன்று கிழமைக்குமேலாக ஆத்தை அவளில் இறங்கவில்லை (பக் 344) “என்ர குஞ்சையே உவள் கைவிட்டிட்டாள். நான் என்னத்தை உதுகளுக்கு வாக்குச் சொல்லுறது மோனே?” எனக் கேட்கிறாள். தாமரையின் முடிவு மிக அழுத்தமாக இங்கு சொல்லப்படவில்லை. தாமரையின் நகர்வு கதையின் நகர்வுக்காக என எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
நகுலாத்தையின் கதைசொல்லி
இருந்தும், நகுலாத்தையில் கதைசொல்லியின் பிரக்ஞை துலக்கமாக உள்ளது. அதனாலயே நாவல் தான் சொல்ல வந்ததை சரியாகச் சொல்கிறது . நாவலில் நிகழும் சம்பவங்களின் பிடிப்பு முழுவதும் கதைசொல்லியின் கைகளில் இருக்கிறது. எப்படியென்றால், சொல்வதையும் நிகழ்த்துவதையும் தன்னைமீறி கதைப்பரப்பில் நிகழ அனுமதிப்பதைக் கதைக்குள் தெளிவான பிரக்ஞையுடன் நிகழ்த்துகிறார் கதைசொல்லி. 344 பக்கங்கள் வரை -தாமரை இயக்கத்தில் சேர்வது- வரை சொல்லப்படுகிற கதை, ஆத்தைவளவு, சொத்திமுனி, குழுவன்பிடித்தல், அம்மா கண், கீரிகளின் வாழ்க்கை என வழமைக்கு மாறாக போர் இலக்கியத்தில் வெறும் ஒடுக்குதல்- ஒடுக்கப்படுதல் என்கிற பாணி கதையிலிருந்து விலகி ஒடுக்கப்படுகிற மக்களின் வாழ்வியலை நிகழ்த்துக்கலையாகச் சொல்லப்படுகிற கதை, தாமரையின் இணைவுக்குப் பிறகு இயக்கத்தைப் பற்றின கதையாக மாறுகிறது. அதாவது, தாமரை இயக்கத்தில் இணைந்ததிலிருந்து கதைசொல்லி வாசகனுக்கு முன் வேறொரு கண்ணாடியை அணிவித்துவிடுகிறார். ‘இயக்கத்தின் ஆள்பிடிப்பு’ லிருந்து விலகி இயக்கத்தில் போராளிகளின் வாழ்வியலை தாமரை பாத்திரத்தைப் பலி கொடுத்து சொல்ல முனைகிறார். இயக்கத்துக்கு முன்புள்ள தாமரையின் அதே இயல்பான, யதார்த்த அப்பாவித்தன செயல்பாடுகள்தான் இயக்கத்துக்குள் அவளது நடவடிக்கையிலும் இருக்கிறது. அதனால்தான் கதையின் துயரகரமானப் போக்கிலும் போராளி கிளி மலம் கழிப்பது பற்றி பேச வேண்டியிருக்கிறது. சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட, அதுவும் போரிலக்கிய வகைமையில் நகுலாத்தை மிகவும் முக்கியமான நாவல் என்பதில் எந்த ஐயமும் இல்லை.