Tuesday, November 12, 2024

த.ராஜனின் பழைய குருடி – அரசியலும் யதார்த்தமும்

மொத்தம் ஐந்து கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. மிகக்குறைந்த அளவில் கதைகளுடன் ஒரு தொகுப்பு வெளியாவது சமீபத்தில் தமிழில் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐந்து கதைகளும் ஐந்துவித வாசிப்பு அனுபவத்தை அளித்தன. ராஜனின் மொழி நடை கூர்மையாக நிதானமாகச் செல்கிறது. மொழிநடையில் அவருக்கு முந்தைய முன்னோடிகளின் பாதிப்பு பெரியளவில் தாக்கத்தைச் செலுத்தவில்லை. கதையைச் சம்பவங்களாகக் கூறும் தன்மை, காட்சிகளை விவரிக்க உவமைகளைப் பயன்படுத்தல் போன்றவை இல்லை. வழமையான சிறுகதைக்கு உரிய திருப்பம், அதிர்ச்சி ஏற்படுத்தும் முடிவு போன்ற விதிமுறைகளுக்கு வெளியே ராஜனின் கதைகள் இயங்குகின்றன. கதையை நகர்த்துவதைப் பற்றிய அவசரம் இல்லை. எல்லா கதைகளும் சமகாலம் x காலமற்றது இரண்டுக்குமான உரையாடலாக இயங்குகிறது. காலமற்றது என்று இங்கு சொல்வது எதுவென்றால், அதைத் திரும்ப மீளிணக்கம் ஆக்க முடியாது. மீளிணக்கம் ஆகாத உறைந்துவிட்ட காலத்திற்கும் விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் சமகாலத்திற்குமான பிணைப்பில் ராஜன் கதைகள் உள்ளன.  இதை இரண்டு விதத்தில் அனுகலாம்

1.       ஒரு பிரச்சனை இரண்டு காலங்களிலும் எப்படி பிணைந்திருக்கிறது என்பதைத்  தொட்டு அந்த இரண்டு காலங்களையும் கதை விவரிக்கிற ஒரு வகையறா.

 

2.         இரண்டு காலங்களிலிருக்கும் ஒரே பிரச்சனையை எது இரண்டாக பிரித்திருக்கிறது என்பதை ஆராய முயலும் இரண்டாம் வகையறா.   

உதாரணமாக, முதல் கதை பாலூட்டிகளில் கந்தையன் என்கிற குடியானவன் தன்னுடைய குடியான சனங்களுடன் அகன்ட விரிந்த அழகான காட்டை ஒரு முதலாளியிடம் கூலி பெற்று உருவாக்குகிறான். அவன் வெறும் கூலிக்காக அதை உருவாக்கவில்லையென்பதை அங்கு வந்த சில நாட்களில் முடிவு செய்துவிடுகிறான். அந்த வனம் மிகப்பெரிய உலகமாக மாறுகிறது. அவ்வனத்தில் நிறைய பறவை பட்சிகள் குடியேறுகின்றன. வௌவால்கள் அங்கு அதிகம். வௌவால் குகைக்குள் அவர் மட்டுமே தைரியமாகச் சென்று வருகிறார். அவரின் காலத்திலேயே வனம் மெல்ல மெல்ல அழிந்து நகரமாகிறது. அவர் அங்கு ஒரு வௌவாலின் பிரசவ வேதனையைப் போக்கி குட்டியைப் பெற்று தருகிறார் என்பதோடு அக்கதை முடிகிறது. பல வருடங்களுக்குப் பிறகு அதே இடத்தில் இளைஞன் ஒருவன் தனது வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். கந்தையன் உருவாக்கிய வனம் இருந்த அதே இடம்தான் இன்று அவனுக்கு வாழ்வை அளிக்கும் நகரச்சந்தடி. நடுத்தர வரக்க வாழ்க்கையில் அவனுக்கு இருக்கிற நிறைய ஊறுவிழைவுகளில் ஒரு வௌவால் ஒன்று அவன் குடித்தன இடத்துக்குள் புகுந்துவிடுவது பெரும் விடயமாகிறது.  

பழைய குருடி கதையில் ஒடுக்கப்பட்டச் சாதியிலிருந்து நகரத்திற்கு பிழைக்க வருகிற ஒருவனின் வாழ்வு போராட்டத்தை எப்படி கரானா ஊரடங்கு (சமகாலம்) துரத்தி அவனை மறுபடியும் பழைய காலத்துக்குள் விரட்டுகிறது என்பதைச் சொல்கிறது. இந்தக் கதையையும் ஒரு முன்கதையுடனே ராஜன்  ஆரம்பிக்கிறார். சின்னத்துரை என்கிற ஒடுக்கப்பட்டவனின் முந்தை வாழ்க்கை அது. அவனது முந்தையத் தலைமுறையின் போராட்டம். கரானா வரவில்லையென்றால் அவனுடைய வாழ்க்கை பழைய காலத்திற்கு இழுத்துச் செல்ல வாய்ப்பே இருந்திருக்காது. கரானா பெருந்தொற்றை வைத்து இப்படி ஒரு போராட்டத்தைக் கற்பனை பண்ண முடியுமா என்று தெரியவில்லை.! ஆனால் கதையில் யதார்த்தம் அவ்வளவு இலகுவாக வந்திருக்கிறது.  சிலி எழுத்தாளர் சாம்பிராவின் குடும்ப வாழ்வு என்கிற கதையின் கதாப்பாத்திரத்தை சின்னத்துரை நினைவூட்டுகிறான். ஆனால் அவனுடைய  பொய்யால் மற்றவர்களின் வாழ்க்கைப் பாதிப்பான். இதில் சின்னத்துரையின் பொய் அவனது கற்பனை உலகை அசைக்கிறது.

அரூபி கதை இரண்டு பெண்களின் வாழ்க்கையை முன்பு சொன்ன பாலூட்டிகள், பழைய குருடி கதைகளைப் போன்று இல்லாமல் கதைக்குள்ளேயே இரண்டு காலங்களையும் மீளிணக்கம் செய்ய வெளிப்படையாக முயற்சிக்கிறது. ஆணாதிக்க      ஒடுக்குதலுக்குப் போராடும் அம்மா தன் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாள். தற்கொலையின் சித்திரம் அவளை விரட்டுகிறது. இந்தக் கதையில் காலன் என்கிற அரூபம் இரு காலங்களையும்  இணைத்துவிட்டு தன் வேலை முடிந்ததாக வெளியேறுவது அற்புதம். மகள் தன் வாழ்வை அம்மாவைப் போன்று ஒடுங்கி வாழாமல் தனக்குப் பிடித்ததாக மாற்றிக்கொள்கிறாள். ஆண்களுடன் உறவு கொள்கிறாள். ஆனால் அம்மாவின் காலம் அவனை சமகாலத்திலிருந்து அவளைப் பிரித்துக்கொள்ள யத்தனிக்கிறது. மகள் இரண்டு காலங்களுக்கும் சிக்குண்டுவிடுகிறாள். இறுதியில் சமகாலத்திலிருந்தபடியே கற்பனைகள் வழிய கடந்த காலத்துக்குள் நுழைந்துவிடுவதுதான் சரி என்று முடிவு செய்கிறாள்.

 

1.       மூன்று கதைகளும் இருக்கிற பொது பண்பு, அந்த அந்தக் கதைக்குள் நிகழ்கிற ஒரு பிரச்சனையை வெவ்வேறு காலத்துடன் தொட்டுக்கொள்கின்றன. மீளிணக்கம் காண முடியாத காலமற்ற உலகிற்குள் தங்களுக்கான தீர்வைத் தேடிக் கொள்ள முயல்கின்றன.

 

2.       கந்தையனின் வனத்தை நகரத்தில் வாழ்வாதாரத்தைத் தேடுகிற இளைஞனால் நிச்சயம் மீளுருவாக்கம் செய்ய  முடியாது ஆனாலும் அவனுக்கு விழைகிற அக ஊறலுக்கான விடையை அவன் கந்தையனின் கண்ணுக்குப் புலனாகாத வனத்திலிருந்துதான் எடுக்க வேண்டியுள்ளது. சின்னத்துரையின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒரு பெருச்சாலி ஒன்று சிதைத்துவிடும்போது அவன் தனது மூதாதையர்களின் வாழ்க்கையில் நடந்த அழிக்க முடியாத சம்பவங்களுக்குள் அதைத் தேடிப் போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அந்த பழைய காலத்தின் சம்பவங்களை நாகரிமடைந்த புதிய உலகத்தின் சமகாலத்தால் மாற்ற முடியாது என்தே நிதர்சனம். இருந்தும் சின்னத்துரைக்கு பழைய காலத்தில் அதற்கான தீர்வைத் தேடுவதைத் தவிர போக்கிடம் இல்லை. மூன்றாவது கதையில் வரும் மகளுக்கும் அம்மாவின் காலத்துக்குள் பயணிப்பதன் வழியே ஒடுக்கப்படும் உலகிலிருந்து இருவரையும் விடுதலை செய்ய முயற்சிப்பது.

 

3.       மூன்றாவது கதை மீளிணக்கம் காண முடியாத காலத்துக்குள் சென்றுவிடுவதுமாதிரி தோன்றினாலும் அதுவும் கற்பனைகள் வழிதான் அதை அடைவதாக நாம் புரிந்துகொள்ள முடியும். அதனால் இந்த மூன்று கதைகளும் ஒரு பிரச்சனை இரண்டு காலங்களிலும் எப்படி பிணைந்திருக்கிறது என்பதை அவ்விரண்டு காலங்களையும்  தொட முயல்கிறது.

 

4.       வின்சென்டின் அறை திருநங்கையாக மாறும் ஒருவனுக்கும் அவனது கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும் யாரோ ஒருவனுக்குமான உரையாடல். இந்தக் கதையின் கதைகூறல் ஸாம்பிராவின்  Ways of Going Home நாவலின் வடிவத்தை ஞாபகப்படுத்துகிறது. முதல் கதையான முந்தையக் காலத்தைச் சொல்பவனும் இரண்டாம் கதையான சமகாலத்தைச் சொல்பவனும் வாசிக்கும் நமக்கு யார் எதைச் சொல்கிறார்கள் என்கிற காலக் குழப்பத்தை அளிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. லத்தின் அமெரிக்க இலக்கியத்தில் இதுபோன்ற வடிவ முயற்சிகள் நடந்திருக்கின்றன. நாம் அதில் கடைசி வரிசையில் இருக்கிறோம். கதையின் இறுதியில் அவனது தோழி கூறியது ஏன் நம்ப வேண்டும் என்கிற வாக்கியம் வருகிறது அது ஒருபொய். அதன்மூலம் கதையின் காலத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்ள முடியும். இதுவும் ஒரு உத்திதான். ஆனால் இந்த உத்தியால் (பொய்) முந்தைய மூன்று கதையில் உள்ள பெரிய வாழ்வு குறித்தப் பாடுகள் எதுவும் அவனுக்கு ஏற்படவில்லை. ஆனாலும் பொய் இரண்டு வாழ்வையும் தனித்தனியாகப் பிரித்திருக்கிறது.

 

5.       இதே மாதிரி ஒரு பொய்தான் அறிவஜீவியின் பொய் என்கிற கடைசி கதையில் ஒரே பிரச்சனையை இரண்டு காலங்களையும் பிரிக்கும் கருவியாக உள்ளது.  அறிவுஜீவியின் பொய் “சமகால தலித் மூவ்மன்ட்க்கான டிரென்டு“ கதைகளிலிருந்து சற்று விலகி நிற்கிறது. காந்தியின் எரவாட உண்ணாவிரதத்தின் வரலாற்று போக்கை மாற்ற முயற்சிக்கும் சமகாலத்தவரின் போராட்டம். இந்தக் கதையில் எரவாட உணணாவிரதத்தில் அந்தக் குறிப்பிட்ட நாளில் தலித் இளைஞன் வந்திருந்தால் காலத்தின் போக்கு மாறியிருக்கும் எனக் கதைசொல்லி விசனப்படுவது ஏன் என்று புரியவில்லை. இது காந்தியைச் சுட்டுக்கொன்றது ஒருவேளை இஸ்லாம் இளைஞனாக இருந்திருந்தால் என்கிற தீவிரமான விடயத்துடன் பொருந்துகிற அளவு ஒன்றும் இல்லை. தலித் இளைஞன் வந்திருந்தாலும் இதே தலித் இயக்கத்தின் போராட்டம்தான் தொடர்ந்து இருக்கும். தலித் இயக்கத்தின் வேர் அந்த எரவாட சம்பவத்தில் மட்டும் இல்லையே.  ஆனால் இந்தக் கதை ஒரு முக்கியமான விடயத்தைப் பேசுகிறது. ஒரு அறிவுஜீவி வரலாற்றில் எப்படியொரு திரிபை ஏற்படுத்துகிறார் என்று. இன்றைக்கு இருக்கும் நிறைய புத்திஜீவிகள் இதைத்தான் செய்கின்றனர். ரஞ்சிதம் அதைக் கண்டுபிடிக்கிறாள். ஒரு பொய் இரண்டு காலங்களையும் பிரித்திருக்கிறது. ஆனால் இன்னொரு காலத்தை எப்போதுமே மாற்ற முடியாது. அதை எந்த வழியிலும் மீளிணக்கம் செய்ய முடியாது.

 

ராஜனின் ஐந்து கதைகளும் சமகால வாழ்வை இருவேறு காலங்கள் முன் கண்ணாடி பிம்பமாக தன்னை நிறுத்திக்கொள்கிறது. சமகால அரசியல் உணர்வுகள் இன்றி இக்கதையை வாசிக்க முடியாது. இது ஒரு வகையில் இதன் பலமும் பலகீனமும். வாழ்க்கையின் அன்றாடப் பாடுகள் விவரித்திருக்கும் இடங்கள் வாசிக்கும் வழமையை நிறைய சோதிக்கச் செய்கின்றன என்கிற குறைகளைத் தாண்டி முதல் தொகுப்பு அளிக்கும் நிறைவு என்பது இதில் சாத்தியம் ஆகியிருக்கிறது.