முத்துராசா குமாரின் ‘ஈத்து’ – தங்கள் உலகை இழக்க மறுக்கும் மனிதர்களின் கதைகள்
ஆதிஃபா
சமீபத்தில் சிறுகதைகள்மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று அவை சமகால வாழ்வின் அரசியலைப் பேசுவதில்லை என்பது. அதிலும் சில கதைகள் சமகால வாழ்க்கையை தொடுவதே இல்லை. பெரும்பாலும் தங்களது பால்ய வயதின் அனுபவத்தைச் சொல்வதில் இளம் எழுத்தாளர்கள் பாதுகாப்பான வளையத்துக்குள் இருந்துகொள்கிறார்கள். அதே சமயம் சமகால வாழ்வைப் பேசுகிற கதைகள் அதன் அரசியல்பாடுகளைச் சொல்லும் விதத்தில் கதையைத் தொலைத்துவிடுவதும் நடந்துவிடுகின்றன. சாதிய அடக்குமுறைகள், முதலாளித்துவ அரசாங்க விதிமுறைகள், வர்க்க ஒடுக்கல்கள், தீண்டாமையின் உருமாறிய வடிவங்கள், அடையாளங்களின் அரசியல் சிக்கல்கள் என சமகால வாழ்வுமீது அடுக்கப்பட்ட படிகளுக்குள் இருந்துகொண்டுதான் நமது கதைகள் பிறக்கின்றன. நாம் கதையைச் சொல்லத் தொடங்குவதற்கு ஆதாரமான காரணமே இந்த மற்றமைக்கும் நமது சுயத்துக்குமான வினையாற்றம்தான் என்பது நாம் அறிந்ததே. இந்த வினையாற்றத்தில் எப்போதுமே கதை தன்மீது இயங்கும் மற்றமையின் உலகத்தைச் சொல்லத்தான் முயற்சி செய்கிறது..
பொதுவாக விளிம்பு நிலை வாழ்வியலின் கதைகள் சுயம் x மற்றமை இந்த இரண்டுக்குமான உறவைத்தான் பேசும். அதனாலயே விளிம்பு நிலை கதைகளில் அதன் அரசியல் செயல்பாடுகளே பிரதான கதைப்பொருளாக இருக்கும். வளிம்பு நிலை அல்லாத பிற கதைகளில் கதைக்கருவைத் தவிர்த்து கதாப்பாத்திரங்களை கதையின் நிலத்திலிருந்து எடுத்து வேறு நிலங்களில் பொருத்த முடியும். அங்கு அத்தகைய கதாப்பாத்திரத்திற்கென்று கதை நிலத்தில் பெரிய உறவு ஒன்றும் இருக்காது. ஆனால் விளிம்பு நிலை மக்களின் கதையில் கதை என்கிற வஸ்து மட்டுமே இருப்பது இல்லை. அந்நிலத்தின் கதாப்பாத்திரங்கள், வழக்காட்டு மொழி, பரிச்சமில்லாத சொற்கள், உரையாடல்கள் என அத்தனையும் சேர்ந்தே அக்கதையை நாம் கதையாக வாசிக்கிறோம்.
இரண்டாவது, விளிம்பு நிலை கதைகள் ஒடுக்கப்படுதலை சொல்வதன் மூலமாக ஒடுக்குவதையும் சேர்த்தே அது கதையாக அமைக்கிறது. உதாரணத்திற்கு, விளம்பு நிலை மக்களின் நிலம், தொழில் அபகரிக்கப்படுவது கதையாகச் சொல்லும்போது ஒடுக்குவதன் அரசியலையும் அது சொல்லாமல் விடுவதில்லை.
முத்துராசாவின் ஈத்து தொகுப்பில் உள்ள மொத்தம் ஒன்பது கதைகளில் ஏழு கதைகள் விளிம்பு நிலை மனிதர்களின் வெவ்வேறு வாழ்வியலைச் சொல்கிறது.
1. மின்சாரம் இல்லாத கிராமத்துக்குள் சூரிய மின்சாரம் வரும் முதல் வரவு,
2. பாவைக்கூத்து கலை அழிந்து போகும் வாழ்க்கை,
3. எலி பிடிக்கும் இடுக்கி செய்யும் கிழவனின் கதை
4. திருவிழாவிற்கு பொம்மைகள் செய்து கொடுக்கும் கடைசி சந்ததியினர்
5. வேலைக்காக வெளிநாடு சென்று இறந்துபோன கணவனின் உடலைப் பெற போராடும் மனைவி
6. கோடாங்கி சொல்லும் மனிதர்
7. ரேக்ளா பந்தயத்திற்காக மாடு வளர்த்து அதை காப்பாற்ற முடியாமல் போகும் ஒருவர்
இதில் கொரவள என்கிற கதை கச்சம்மா வீரம்மா என்கிற பெண்களின் நட்பின் கதை. வழக்கமாக நாம் படித்து, கேட்ட கதை என்றாலும் இக்கதை நிகழும் நிலம், அவர்களின் பண்பாடு, உயிர்ப்பும் ஈரமும் கொண்ட வாழ்வு என புதிய உலகத்துக்குள் விரிகிறது. முக்கியமாக இக்கதை முழுக்க வீரம்மா கச்சம்மாவின் பாடல்கள், ஒப்பாரிகள் வருகின்றன. தன் தோழியான வீரம்மா இறந்தபிறகு கச்சம்மா பாடும் ஒப்பாரி என ஒருவித சோகத்தின் ஓலமாக கதை சொல்லப்படுகிறது.
முத்துராசாவின் கதைகள் இவ்விதமான பழி சுமத்துவதிலிருந்து விலகி ஒடுக்கப்பட்ட வாழ்வு நவீன உலக மாற்றத்திற்குள் சிக்கிக்கொண்டதைச் சொல்ல முயல்கிறது. தமிழ் கதைகளில் இதுவரை அறியப்படாத களங்கள் இவை. முத்து ராசாவின் மொழிநடை நம்மை வசீகரிக்கும் கிராமத்து பறவைகளின் குரல்களுக்குச் சொந்தமானவை. பறவைகளின் குரல்களை வயல் வரப்பு நிலங்களில் கேட்பதைப் போன்று கதையும் மொழியும் உரையாடல்களும் கதாப்பாத்திரங்களும் பினைந்திருக்கின்றன. முத்துராசாவிடன் கதை வேறு மொழி வேறு என்று பிரிக்க முடியாது.
இந்தக் கதைகளில் பிரதானமாக வெளிப்படுவது முத்துராசாவின் நிலவியலும், மனிதர்களும், அவர்களின் பண்பாடு, நம்பிக்கைகள் மற்றும் நவீன கலாச்சாரத்தின் வருகை. மாறிக்கொண்டிருக்கும் நவீன உலகின் வலுவான பேரடி (மாற்றத்திற்குப்) பின்னால் பிடிவாதமாக தங்களின் உலகங்களை எளிதாக இழக்க மறுக்கும் மனிதர்கள் இவர்கள். ஆனால் அவர்கள் அவ்வளவு முரண்டுபிடிக்கிறவர்களாக இல்லை. உதாரணமாக, முதல் கதையான தொல்லிருளில் மின்சாரம் இல்லாமல் வாழும் கிராமத்து சனத்திற்கு முதன் முதலில் ஒரு தொண்டு நிறுவனம் சூரியமின்சாரத்தை அளிக்கிறது. அதுவரை அலைபேசியை உயிர்ப்புடன் வைப்பதற்கே மின்சாரத்திற்காக உதவிக்குப் போக வேண்டியவர்களுக்கு மின்சாரம் அவர்களின் உடமையாகிறது. அதாவது அலைபேசி என்கிற நவீன சாதனம் எப்படி ஒரு மாற்றத்தை அனுமதிக்கிறது என்பதாக நாம் வாசிக்க முடிகிறது.
இந்தக் கதைகளை கூர்ந்து வாசிக்கையில் ஒரு விசயம் ஆச்சர்யமளிக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியல் பேசும் கதைகள் பெரும்பாலும் ஒன்று, ஒடுக்கியவர்களின்மீது அது குற்றத்தைச் சுட்ட வேண்டும் அல்லது ஒடுக்கப்படுவதற்கான வாய்ப்பை தன்மீது சுமத்திக்கொள்ளும் இயல்பு குணத்தைக் காட்ட வேண்டும். இந்த இரண்டாவது வகையை சற்று விளக்கிக்கொள்வோம். உதாரணத்திற்கு படித்து முன்னேறியவர்களின் அதிகாரம் படிக்காமல் விடப்பட்ட தன் சூழலின் நிலை என்று தங்களை காரணமாக்கிக்கொள்ளுதல் என்று புரிந்துகொள்ளலாம். இந்த இரண்டும் இல்லாமல் மூன்றாவதாக ஒரு அர்த்தத்தை முத்துராசாவின் கதைகள் பேசுகின்றன. ஒடுக்கப்படுவது அல்லது விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வின் ஆதார ஸ்திதி அழிந்துபோவதற்குக் காரணமாவது ஒடுக்கப்படும் இயல்பு குணமோ அல்லது ஒடுக்கியவர்களின் அதிகாரமோ அல்ல. நவீன உலகின் மாற்றம். அதாவது உலகமயமாதலின் ஆபத்து அது என்று அர்த்தப்படுத்தப்படுகிறது. அத்தகைய மாற்றம் எந்த நிலை வாழ்வியலையும் ஒடுக்கும். முன்னது வேகமாக நடக்கிறதென்றால் பின்னது மெதுவாக நடக்கும்.
முத்துராசாவின் கதைகள் எந்த வர்க்கத்தினரையும் எந்த உடைமையினரையும் குற்றம் சாட்டுவதில்லை. விழுமியங்களில் ஏற்படுத்தியிருக்கும் ஒரு திடமான சாராம்சத்திற்கு யாரையும் அது கைகாட்டி உரத்தப் பேசுவதில்லை மாறாக, எளிய மனிதர்கள் அதிகாரங்களைக் கண்டு மெல்லி உதட்டுச் சுழிப்பில் விலகிப் போகும் இயல்பான தொனியைக் கதை முழுக்க வெளிப்படுத்துகிறது. இமையத்தின் கதைகள் சில இவ்வாறான நடையில் செல்லும். அது கண்ணுக்கு முன்னால் நடந்ததை அப்படியே பதிவு செய்துவிட்டு விலகும். முத்துராசா தனது முதல் தொகுப்பிலேயே அதை சாத்தியப்படுத்தியிருப்பது அவர்மீதான நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ் சிறுகதைகளில் சமீபத்தில் நவீன மாற்றத்தின் பாதிப்பை மௌனமாகச் சுட்டிக் காட்டி விலகும் கதைசொல்லல் பாணியை இவரிடம்தான் வாசிக்க முடிந்தது.