விஜயராவணின் கதைகள் வாசகனை ஆழமாக ஊடுறுவிச் செல்வதோ அவனுடைய அகவுலகில் உரையாடுவதோ அல்ல. அதே நேரத்தில் வெகுஜன தன்மையிலான கேளிக்கைக் கதைகளாகவும் ஒதுக்கிவிட முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில் கேளிக்கைக் கதைகள் “வெகுஜன மனநிலையில் இயங்கும் ஒழுங்கின்” விதியைச் சரியாகத வைத்திருக்கும். மனித உணர்வுகளின் மெல்லுணர்வை அதிர வைக்கும் சூத்திரம் அதில் உண்டு. தீவிர இலக்கியத்தில் அத்தகைய சூத்திரங்களுக்கு இடமில்லை. அவை வெறும் அதிர்ச்சியை மட்டும் தரவல்லவை கிடையாது. சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் 1. பொதுவெளி உரையாடலுக்குரிய விவாதங்களை அவை தவிர்த்துவிடும். 2. அவற்றை பொதுவெளி சிந்தனையிலிருந்து விலகி நோக்க முயற்சிக்கும்.
விஜயராவணின் கதைகள் யதார்த்தத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்துகின்றன என்று நிச்சயமாக சொல்ல முடியாது அதே சமயம் கேளிக்கை வகையிலும் அடங்காமல் இந்த இரண்டுக்கும் நடுவில் இருக்கின்றன.
கல்கத்தாவில் ஒரு சிற்றுண்டியில் வேலை பார்க்கும் சிறுவன் சவுமுவிற்கு ஒருநாளாவது கப்பலில் ஏற வேண்டு என்கிற விருப்பமே காகிதக்கப்பல் கதை. ஒவ்வொரு நாளும் கப்பல் கிளம்பும் ஒலி அவனது ஆசையை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறது. கப்பல் அவனுடைய உலகில் ஒரு மாயத்தன்மையாக உருவாகிறது. அது அவனால் அடைய முடியாத எல்லையில் மிதக்கிறது. சிறுவன் நமக்கு சத்யஜித்ரேயின் சிறுவனை நினைவூட்டுகிறான். அவ்வளவு அழுத்தமான யதார்த்த அழகியலைக் கொண்ட கதை.
சவப்பெட்டி ஒருவகையில் டிஸ்டோபியன் மாதிரியான கதை அல்லது போர்ச்சூழலில் நிகழும் எந்தவொரு நிலத்தின் கதையாகவும் வாசிக்க முடியும். தங்ளைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு சவப்பெட்டி போதுமாக இருக்கிறது. சவப்பெட்டி எப்படி ஒரு குடும்பத்தை மறைக்கும் என்கிற கற்பனையே அபாரம்தான். பொதுவாக இம்மாதிரியான கதைகளில் அச்சூழலின் கோர நிகழ்வுகளை கதையாக்கவே ஒரு கதைசொல்லி பிரயத்தனப்படுவார். அவரது கதைசொல்லி அச்சூழலின் அம்சத்தை அழுத்தமாக விவரிப்பதன் வழியே கதையின் நம்பகத்தன்மையை உருவாக்க முயற்சிக்கும். ஆனால் இதில் அது தலைகீழாக நடக்கிறது. சவப்பெட்டிக்குள் நடக்கும் அப்பா, அம்மா, பிள்ளைக்கு இடையேயான உரையாடல்களும் அவர்களது போராட்டமும் வெளி உலகின் அச்சத்தை சித்தரிக்க போதுமானதாக மாறியுள்ளது.
ஐப்பானிய மொழிபெயர்ப்புக் கதையை வாசிக்கும் உணர்வை அளித்தாலும் பேசும் தேநீர் கோப்பைகள் கதை ஜென் தத்துவங்களை வாசித்த அமைதியைக் கொடுக்கிறது. அதே சமயம் அந்நிய நிலத்தின் கதையை இவ்வளவு யதார்த்தமாக அந்தப் பிராந்திய உலகத்துடன் நம்மால் ஒன்ற முடிவதும் அவ்வுணர்வை அனுபவிக்க முடியும் என்பதே இக்கதையின் சிறப்பு. ஆனால் யுனிவர்சல் எமோஷன் என்பது எல்லா பிராந்தியத்துக்கும் பொதுவான ஒன்றுதானே!. கதை எந்த நிலத்தில் எந்த மொழியிலிருந்தாலும் அதன் உயிர் மொழிகளற்றது, நிறமற்றது இல்லையா?. இரண்டு வயதானவர்களின் கடந்த கால அசைபோடல்தான் முழுக்கதையும். கதையில் புதிதாக எதையுமே சொல்ல வேண்டியதில்லை அந்தச் சூழலையும் இரு வெவ்வேறு மனங்களின் உரையாடல்களும் போதும். அது உருவாக்கும் அழுத்தம் அந்தத் தருணத்தை ஒரு கதை போல மாற்றிவிடும் என்கிற தனித்துவம் எல்லா இடங்களுக்குமானதாக இருக்காது என்பதையும் நினைவில் வைக்க வேண்டியுள்ளது.
விஜயராவணின் எல்லா கதைகளிலும் பால்ய காலத்தை அசைபோடல் என்கிற பொதுவான அம்சமே கதையாக உருவாகிறது. அந்த அசைபோடல் மட்டுமே ஒரு படைப்பாளி கதைகளைச் சொல்ல போதுமானதா என்பதையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஆப்ரிக்க நாட்டில் இராணுவக் கட்டுபாடுகளின்கீழ் நடக்கும் உதைக்கப்படாத கால்பந்துக்கதையும் கிட்டத்தட்ட கல்கத்தா சிறுவனின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்றாலும் அதிலுள்ள மாயத்தன்மையையொத்த கதையம்சம் இதில் கிடையாது. ஆனாலும் புறவயமான அந்நிலத்தின் சித்தரிப்புகளாலும் கருணையைக் கோருகிற சம்பவத் தொடர்ச்சிகளாலும் நல்ல கதையாக அமைகிறது.
மேலும், சிட்டுக்குருவி, மொட்டைமாடி, முகங்கள், நிழற்காடு, அநாமதேய சயனம், போதிசத்வ போன்ற ஆறு கதைகளும் வாசகனுக்குள் எந்த உரையாடலையும் உருவாக்காத சாதாரணக் கதைகளே. தான் கட்டிய வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டியதைப் பாதுகாக்கும் மனிதர், மொட்டை போடுவதிலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கும் பால்ய வயது பையன், தவமிருந்து பெற்ற மகனின் நடத்தையால் தலைகுனிவடைந்து பிறகு அவனது இழப்பால் முகமூடிகளை சேகரிக்கும் அப்பா, உறக்கத்தின்போதையில் பால்ய காலத்திலிருந்து பழகிய ஒருவனின் கை நழுவும் காலங்களைப் பற்றிய ஏக்கம், நிழற்காட்டைப் பற்றிய தொன்மையான நம்பிக்கையும் அதனுள் உலவும் நாட்டார் இயல்பும், புத்தரிடம் உயிர் தியாகத்தைப் பற்றி கேட்கும் ஒருவனது தாயின் குற்றவுணர்வு என நாம் வாசித்த, பொதுபுத்தி தளத்தில் நிகழும் கதைகள் இவை. இந்தக் கதைகளில் வரும் கதைசொல்லி தனது பால்ய காலத்தின் பக்கங்களை எந்த உணர்வுகளையும் கடத்தாத மொழியால் சொல்லிப் பார்க்கிறார். தட்டையான கதைசொல்லல், மழுங்கிய உணர்வுகள், ஆழமற்ற கதாப்பாத்திரங்கள் என அயர்ச்சி ஏற்படுத்துகிறவை. விஜயராவணனுக்குரிய சிறப்பான பயண அனுபவத்தின் வரும் பாதைகளில் இம்மாதிரியான கதைகள் உதிர்ந்து போகும் என்று நம்புகிறேன்.
விஜயராவணின் கதைகளின் வருகிற கதைசொல்லி கிட்டத்தட்ட தனது பால்யகாலத்தை அசைபோடுவதையே செய்வதாக தொகுப்பை முடிக்கையில் நினைவில் எஞ்சுகிறது. பால்யவயதில் நடந்த தவறுகள், அனுபவங்கள், கேட்ட கதைகள் என அனைத்தையும் முழுக்க முழுக்க புனைவின் மொழியால் கூறாமல் நினைவடுக்களின் குறிப்புகளாக சொல்கிறார். அதாவது அவ்வனுபவங்கள் கதையாக புனைவுமொழிக்குள் இயங்காமல் தன்னை சிறிய குறிப்பாக மட்டும் காட்டுகிறது.
இரண்டாவது, விஜயராவணின் கதைநிலத்தை இரண்டு விதமாகப் பிரித்துக்கொள்ளலாம் . ஒன்று தமிழ் நிலத்தில் (நமக்கு பரிச்சயமான) நடக்கக்கூடியவை. இரண்டாவது, தமிழ்நாட்டிற்கு வெளியே அல்லது நமக்கு பரிச்சமில்லாத புதிய நிலத்திற்குரியவை. இக்கட்டுரையில் நல்ல கதைகளாக குறிப்பிட்டவை புதிய நிலத்துக்குரியவை என்பது தற்செயலாக அமைகிறது.