பிரவீன் மனோ, ரா.சந்தோஷ்
உடலுக்கும் ஆன்மாவுக்குமான துவந்தத்தை எத்தகைய கலை வடிவங்களில் கூறினாலும் அது கடைசியாகப் போய் முடிவது “உடல் அழியக்கூடியது ஆன்மா அழிவற்றது”. அழிந்து கொண்டிருக்கும் உடலிலிருந்து ஆன்மாவை காப்பாற்றி எடுக்கும் ஓர் உன்னத வடிவம் கலை மட்டுமே.
பவதுக்கம் நாவல் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள், ஆனால் ஒன்றோடொன்று பிணையப்பட்ட மனிதர்களின் கதை. இந்த இரண்டு குடும்பங்களையும் பிரித்துப் பார்க்கும் பிரத்யேகக் காரணம் எதுவும் இல்லையென்பதால் இரு குடும்பங்களையும் ஒரே குடும்பத்தின் கதையாக வாசிக்க முடிகிறது. ஐயப்பனின் இரண்டு மனைவிகள், அவர்களுடைய பிள்ளைகள், ஐயப்பனுக்கும் நாடாருக்குமான முதலாளி தொழிலாளி வர்க்க உறவு, ஐயப்பனின் மகன் கருணாகரன் அவனது சந்ததி இப்படி மூன்று தலைமுறைகள் வரை அந்தக் குடும்பத்தின் சுக துக்கம், தொழில், நிலம், நோய்மை மற்றும் பிற ஆசைகள் நிராசைகள் பற்றிய கதைகளின் தொகுப்பு.
பொதுவாக நோய்மையை பேசக்கூடிய கதைகள் மூன்று நிலைகளில் கதையாடலை நோய்மைக்கு மறுபக்கத்தில் வைக்கும். ஒன்று, ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நோய்மையின் அன்றாட வளர்ச்சியைப் (தீவிரமான அதன் முற்றிய நிலை) பற்றி விவரிக்கிற கதை. இரண்டு, நோய்மைக்கும் மற்றமைக்குமான (நோய்மை அல்லாத பிறிதொரு உடல், உணர்வுகள் ) உறவு நிலை. மூன்றாவது, நோய்மையின் அகவுலகில் விரியும் சிதறலான எண்ணங்கள்.
நோய்மைதான் அந்த நாவலின் மையமாக இருக்கும் பட்சத்தில் கதையாடல் இந்த மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றிலோ அல்லது இரண்டு தளங்களிலோ செயல்படும். சமீபத்திய உதாரணம் என்றால் சீர்மை குறுநாவல். நோய்மையின் ஒவ்வொரு நிலைகளையும் சொல்லியபடி அதாவது, நோயை விதையிலிருந்து முளைக்கும் விஷச்செடியாக அது வளரும் படிகளை விவரிக்கிறபோதே நோய்மைக்கும் மற்றமைக்குமான உறவையும் அதன்மீதான தத்துவ விசாரங்களை மௌனப் புள்ளிகளாக உருவாக்கிய நாவல் அது.
பவதுக்கம் பேசும் நோய்மை இந்த மூன்றில் எந்த வகைக்குள் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது?
நோய்மையைப் பேசுகிற கதைகள் என்கிற சிறப்பு அது கதைக்களமாக இருப்பதினால்தான் மேலதிக ஆர்வத்தை அளிக்கிறது. நாவலின் கரு இன்னதென ஒற்றை வரியில் சொல்லக்கூடியதை (மையம்) அதைச் சுற்றி எழுப்பபடுகிற கதையாடல்களால்தான் இத்தனை பக்கங்களில் விரிகிறது. நோய்மை என்பது நாவலின் மையமாக இருப்பதும் கதைக்களமாக இருப்பதும் அதன் கதையாடல்களால் மட்டுமே அர்த்தப்படுத்தப்படும். உதாரணத்திற்கு சீர்மை குறுநாவல் கதைக்களமாகவும் கதையின் மையமாகவும் நோய்மையின் உலகில் உழல்கிறது. செவ்வியல் நாவல் ஒன்றை உதாரணமாக எடுத்துக்கொண்டால் பசித்த மானிடத்தைச் சொல்லலாம். வெளிப்படையாகவே தன்பால் உறவையும் காமத்தையும் குரோதத்தையும் அதன் அத்தனை பரிமாணங்களின்மூலம் விசாரணை செய்த படைப்பு. கணேசன், கிட்டா இருவரின் வாழ்வை உச்சத்திற்குக் கொண்டு சென்று பின் குலைத்துப் போடுகிறதாக ஒரு மணல்கடிகையின் வடிவில் காமமும் குரோதமும் வரையப்பட்டிருக்கும். மாச்சி, அம்மு, நீலா, பூமா என நாவலில் வருகிற பெண் பாத்திரங்கள் அனைவரும் அவலத்தையும் குரூரத்தையும் ஏந்தியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு விதிக்கப்படுகிற வாழ்வு எல்லா உன்னதங்களையும் பரிவோடு பார்க்கும் பக்குவத்திற்கு தள்ளிவிடுகிறது. நிறைவடையாத அவர்களின் வாழ்வே அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ளும் கருவியாக இருக்கிறது. முன்பே சொன்னதுபோல காமமும் குரோதமும் கலந்த இவ்வாழ்வு மணல்கடிகையின் ஒரு பகுதி போல ஒருபக்கம் (காலம்) நிறைவதும் அதைத் திருப்பி வைக்கையில் (காலத்தின் அடுத்த பகுதி) சரிவதும்தான் பசித்த மானிடத்தின் கதைசொல்லலை செவ்வியலாக்குகிறது.
பவதுக்கம் நாவல் நோய்மையைப் பற்றி பேசுகிறதாக வாசித்தோமானால் ( காமம் , நோய்மை ஆகிய இரண்டும் இதன் மையமென முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார்) அது கதையின் முழுமையான உலகுடன் இணைவுறாதக் கிளைக் கதைகளால் ஆனப் பிரதியாக மாறியிருப்பதைக் கவனிக்க முடியும். உதாரணத்திற்கு கார்த்திகாவை எடுத்துக் கொள்ளலாம். ஐயப்பனின் மகளான கார்த்திகாதான் நமக்கு நோய்மையுடன் அறிமுகமாகும் முதல் கதாபாத்திரம். அவளது மரணத்திலிருந்துதான் நாவல் துவங்குகிறது. அவளது மரணத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அங்குதான் அறிமுகமாகிறார்கள். அவர்களுடைய எண்ணவோட்டங்கள் மரணத் தருவாயிலேயே நம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். கார்த்திகாவின் மரணத்தை விரும்புகிற நாகம்தான் கார்த்திகாவின் இணை ஆத்மாவாக கதையின் கடந்த காலங்களில் வருகிறவள் !. நாகம் மாற்றாந்தாயின் மகள் என்பதால் கார்த்திகாவை வைத்தே நாகத்தின் இருப்பு அர்த்தப்படுகிறது. நாகமும் ஒருவகையில் நோய்மையுடன் இருப்பவள்தான். காமத்தை இந்த இருவரும் தங்களுக்குள் பதிலீடு செய்துகொள்கின்றனர். தனது சகோதரனிடம்கூட அதை அவள் தெரியப்படுத்தி கடிதம் எழுதியிருக்கிறாள்.
இரண்டாவது, நாடாரின் மனைவியான வள்ளியும் நோய்மையில் படுத்திருக்கிறாள். அவளுடைய நோயைக் குணப்படுத்த முடியாமல் நாடார் வேதனையுறுகிறார். அவரது உடல் தேவைக்கு லீலாவை அனுபவிக்கிறார். லீலா படுக்கையில் கிடக்கும் வள்ளியை காண்கிறாள். கார்த்திகா- நாகம் மாதிரி லீலா-வள்ளி இருவரும் தங்களது வெவ்வேறு உலகங்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.
இந்த மூன்றுபேரும் நாவல் முழுக்க நோய்மையுடன் இருக்கிறார்கள். மூவரும் பெண்கள் என்பது கவனிக்க வேண்டியது. மூவரின் நோய்மையும் காமமும் மற்றவர்களுடன் ‘பங்கீடு’ செய்து கொள்ளப்படுகிறது. கார்த்திகா நாகத்தைத் தேர்ந்தெடுக்கிறாள், வள்ளிக்கு நாகத்தைப் போன்ற துணை இல்லையென்றாலும் அவளது தனிமையும் கட்டிலும் எப்போதாவது வந்து போகும் சிலரின் பேச்சும் அவளுக்கு ஆசுவாசம் அளிக்கின்றன. இந்த மூன்று பேரின் உடலும் நோய்மையில் அவர்கள் உழலும் மனச்சிதறல்களும் புலம்பல்களும் இருன்மையான உலகத்தைக் காட்டுகிறது. ஆனால் இவர்கள் தங்களது ஆற்றாமை, கோபம், காமம், குரோதம், ஆசுவாசம், ஏக்கம் போன்ற உணர்வுகளை மற்றவர்களுடன் ‘பங்கீடு’ செய்துகொள்ளுமளவுக்கு அதை மற்றமைகளுடன் ‘பரிசீலிப்பது’ இல்லை. மனக்குமுறல்களை கேட்டும் இன்னொரு செவிகளாக மற்றவர்கள் (கார்த்திகாவைத் தவிர்த்து) தேவைப்படுகிறார்கள்.
அதே சமயம் இவர்கள் வருகிற பகுதிகள் முழுக்க முழுக்க அந்த மனிதர்களின் குரல்வளை நோய்மை பற்றிய சுய சித்திரிங்களை (Self Portrait) பேச வைக்கும் கதைசொல்லியின் குரலாகக் கேட்கிறது. கார்த்திகாவிற்கு கடிதம் எழுதும் சகோதரன் கருணாகரனும் நோய்மையைப் பெரும் வரமாகவே போற்றி எழுதுகிறார்.
“வலி ஒரு விடுதலை. உனக்கு சுதந்திரம் உடலிலிருந்து வேண்டுமெனில், வலியை அனுபவி. வலி உச்சத்திலிருந்த கணங்களில் பிறகு உன்னால் காமத்தின் உச்சத்தை, நல்ல உணவின் சுவையை, இசையை உணர முடியும்”
நோய்மையை வெவ்வேறு திசைகளிலிருந்து அதை மானுட உன்னதங்களின் ஒன்றாக மாற்ற நினைக்கும் கதைசொல்லியின் பிரக்ஞை இது. இதனாலயே பவதுக்கம் நாவலில் வரும் முதன்மையான இந்த மூன்று நோய்மையுற்ற பெண்களின் உலகுக்கும் மற்றமைகளுக்குமான உறவு தெளிவற்றதாக இருக்கிறது. நோய்மை, காமம் இவ்விரண்டும் அந்தப் பெண்களின் உலகைப் பிடித்து வைத்திருக்கிறது. நோய்மையும் காமமும் இந்த நாவலின் மையமென வாசிக்கையில் லட்சியமற்ற முழுமையில்லாதவர்களாகத்தான் இவர்கள் தெரிகிறார்கள். தன்னை விட்டுச் சென்ற கணவனைத் தேடி, அவனுடன் அடையாளமற்ற தன் உருவ மாற்றத்தின் உதவியால் உடலுறவு கொள்ளும் ராசத்தையும் முழுமையற்ற லட்சியமில்லாதப் பெண்ணாகவே பார்க்க முடிகிறது.
லட்சியமில்லாத மனிதர்கள்
நாவலின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமான லட்சியங்கள் இருக்கலாம். லட்சியங்கள் என்பது அக்கதாபாத்திரங்களின் முழுமை வடிவத்தின் பண்புகள். பொதுவாக, நாவலின் முதன்மை பாத்திரங்களிலிருந்து கிளைக்கதைகளில் வருகின்ற ஏனைய பெரிய, சிறு பாத்திரங்கள் வரை ஒவ்வொன்றும் வெவ்வேறு வாழ்வியல் லட்சியங்களுடன் இருக்கும். நாவலின் கதைசொல்லி இந்த மனிதர்களை அவர் கட்டமைக்கும் உலகத்துடன் (யதார்த்த உலகம் இல்லை) வெவ்வேறு பண்புகள், அரசியல், மொழி, உணர்வுகள் வழியாக அவர் சொல்ல வந்த கதையுடன் உரையாடலை நிகழ்த்துவதன் மூலம் ஒரு பருண்மையான பண்புக்கு அவற்றை கதையின் போக்கில் இணைக்க முயல்வார். உண்மையில் அக்கதாபாத்திரங்களின் முரண்கள், மைய பாத்திரத்திற்கும் அதற்குமான இருமை எதிர்வு போன்றவற்றாலயே அந்த நாவல் ஒரு முழுமையான உலகை சித்தரிக்கிறது. சுருக்கமாக, மைய பாத்திரத்தின் வாழ்க்கைக்கும் லட்சியத்திற்கும் நாவலில் வரும் மற்ற மனிதர்களின் லட்சியங்களுக்கும் ஒத்த நிலை இருக்க வேண்டியதில்லை. அவர்களின் ஒற்றுமை, முரண்கள் தான் மைய கதாபாத்திரத்தின் முழுமையை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. அதாவது, மைய கதாபாத்திரமும் அல்லது நாவலின் மைய கருத்தியலும் எப்படி தன் உலகளாவிய பண்பை கொண்டிருக்கிறது என்பதையும் மற்றமைகளுடனான அதன் உறவும் இந்த இணை மற்றும் கிளை கதாபாத்திரங்கள் வழியே நாம் தெரிந்துகொள்கிறோம்.
பவதுக்கம் நாவல் வேறு எதைப் பேசுகிறது?
பவதுக்கம் நாவலின் மையம் என ஆசிரியர் கூறும் நோய்மை, காமம் ஆகிய இரண்டும் இருப்பதற்கான பொருள்கோடல் இல்லை. முதலில் குறிப்பிட்டதுபோலவே நோய்மை இந்நாவலின் கதைக்களம். காமம், குரோதம், துரோகம் போன்ற உணர்வுகளெல்லாம் கதையின்மீது கட்டப்படுகிற கதாபாத்திரங்களின் குணவியல்புகள். கதையின் விவாதத்தில் பங்கு பெறக்கூடியவை இல்லை. அப்படியென்றால் நாவலை எப்படி வாசிக்க முடிகிறது? மூன்று தலைமுறைகளாக (உரிமையில்லாத) நிலத்தை உடமையாக்கிக்கொள்ள முனையும் மனிதர்களின் கதைதான் பவதுக்கம் நாவல்.
கோலப்பனிடமிருந்து அந்தோணி நாடார். அந்தோணி நாடாரிடமிருந்து ஐயப்பன். ஐயப்பனிடமிருக்கும் நிலம் அதிகாரம் என்னும் பெயரில் தன் மகன் கருணாகரனுக்கு பாத்தியப்படுவது, பிறகு அது அவனது மனைவி செல்வியிடம் என மாறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் நிலத்தை (அதிகாரத்தை) இழந்தவுடன் அந்த நிலத்திற்காக விதிவசத்தால் அதே இடத்தில் வேலைபார்க்கும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். (கருணாகரனும்கூட செல்வியிடம் வேலை பார்க்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறான்). நிலத்தை மீட்க வெவ்வேறு நரித்தனங்களை ஒவ்வொருவரும் கையாள்கிறார்கள். நிலத்தின்மீதான விருப்பம் அவர்களது குடும்பங்களின்மேல் சாபமாக நோய்மையை கொண்டுவருகிறதாகவும் எண்ணத் தோன்றுகிறது. ஐயப்பன் நிலத்திற்காக எந்த எல்லைக்கும் பயணிக்கிறான். அவனது அலைச்சலின் வினையூக்கிகளாக குரோதமும் காமமும் அன்பும் பாசமும் குரூரமும் பயன்படுவதைத்தான் பவதுக்கம் நமக்குச் சொல்கிறது.
இறுதியாக, உணர்வுகளை மொழியாக்குவதில் சொற்களின்மேல் அதீதமான கனத்தைச் சுமத்துவதில் ஆசிரியருக்கு இருக்கும் விருப்பம் / இயலாமை, அவ்வுணர்வுகளை வெளிப்படுத்துவதிலிருந்து வாசகனை விலக்கிவிடுகிறது.
ஐயப்பன் நாடாரை சீண்டும் இடத்தில்
நாடாரின் உடம்பில் அந்த எரிச்சல் அதிகமானது. தீ பட்டதைப்போல உடலை உலுக்கி நெஞ்சிலும் வயிற்றிலும் தட்டித் தட்டி விட்டார்.
நீ காட்டாறுகள் மழை பெய்து முடிந்து நாட்கள் ஆனபின் காணவேண்டும், கண்ணாடியின் உருக்கொண்டு உள்ளிருக்கும் உருளைக் கற்களின் மேலுள்ள ரேகைகள் முதற்கொண்டு துல்லியமாகத் தெரியும். (கருணாகரன் தன் சகோதரி கார்த்திகாவிற்கு காமத்தைப் பற்றி சொல்கிற கடிதம்). இத்தகைய தருணங்கள் நிறைய நாவலில் விரவி உள்ளன.
அடுத்ததாக, ஆபாசமாக என்கிற சொல் வெவ்வேறு வாக்கியங்களில் திரும்பத் திரும்ப வருகிறபோது பொருள் இழந்து ஒவ்வாமையை பிரதிபலிக்கிறது. நாவலின் உரையாடல் தளங்கள் ஏற்கெனவே வாசித்த இதே புழங்குச் சொற்கள் இருக்கும் பழைய கதைகளை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
நாவலின் கடைசி பகுதிகள் காலங்களைத் தாண்டி ஓடுகின்றன. குறிப்பாக, கருணாகரனின் வாழ்க்கை. இது நாவல் முடியப்போவதை வாசகனுக்கு அறிவித்துவிடுகின்றன.
இவை முதல் படைப்பில் இயல்பாக வரும் சிக்கல்கள்தான். இம்மதிப்புரை எழுதக் காரணமான நாவல்மீதான கேள்விகளும் உரையாடல்களும் முதல் படைப்பு எனும்போது அதுவும் நாவலாக வெளிவருவதில் இவான் கார்த்திக் நம்பிக்கை அளிக்கிறார்.