Sunday, October 6, 2024

நிழற்காடு – சிறுபத்திரிக்கைகளின் தவறு

nizharkadu

 

 

நிழற்காடு விஜயராவணின் முதல் தொகுப்பு. முதல் தொகுப்பு என்பதற்காக தமிழிலக்கியத்தில் வழக்கமாக சில விதிவிலக்குகள் கொடுக்கப்படும். பெரும்பாலும் அதை மூத்த எழுத்தாளர்கள் செய்வார்கள். எத்தனை மோசமான கதை என்றாலும் “கதை நன்றாகச் சொல்ல வருகிறது. ஆனால் எதை கதையாக்க வேண்டும் என்பது தெரியவில்லை. அடுத்த அடுத்த கதைகளில் அவர் அதைக் கண்டுகொள்வார்”. ஒருவகையில் இளம் எழுத்தாளரை தட்டிக்கொடுப்பது மாதிரிதான் இது. அவர் எழுத வந்துவிட்டார். நிச்சயம் அடுத்தமுறை நன்றாக எழுதிவிடுவார். இது ஒன்றும் ஓட்டப்பந்தயம் இல்லையே. முதல் சுற்றில் தடுமாறியவரை கலந்துகொண்டதற்காக உற்சாகப்படுத்துவதற்கு. இலக்கியம் வாழ்க்கைச் சொல்ல உருவாவது. எழுத அவனுக்கு ஓர் உலகம் தேவையென்றால் அவன் அதை உருவாக்கும் முதல் படிகளிலேயே அவதானிக்க முடியும். ஒருவனுக்கு மிகச் சாதாரண வாழ்வனுபம் அமைந்திருந்தாலும் அதை அவன் எப்படி பார்க்கிறான் என்பதுதான் முக்கியம். எழுத்தாளனுக்கு சாமானியனைவிட மோசமான வாழ்வனுபம் கிடைக்க வேண்டும் என்கிற “மேலதிக தகுதி” ஒன்றும் இல்லை. அவனுக்கு அமைந்த வாழ்வை அவன் எந்த அரசியலோடு அனுகுகிறான் என்பதுதான் முக்கியம். அரசியல் என்பதன் அர்த்தம் இங்கு வேறு.

வெறும் சிறிய உலகத்தைக் கொண்டிருந்த ஆ.மாதவனின் கதைகள், மனவுலகத்திற்குள் மட்டுமே பாய்ந்தோடிய மௌனியின் கதைகள், அருபத்திற்கும் உருவத்திற்கும் இடையில் ஊடாடிய நகுலனின் கதைகள், மத்தியதர வாழ்வை கதைகளாக்கிய அசோகமித்திரன் என இவர்களெல்லாம் போராட்டமான வாழ்வைக்  கொண்டிருக்கவில்லை. இவர்களின் கதைகளை வாசிக்கும்போது அது வாழ்வை எப்படி ஊடுறுவி நோக்குகிறது என்பதை உணரலாம். வாழ்வின் எந்த நிலையிலும் ஒரு படைப்பாளிக்கு இருப்புக் குறித்தான கேள்வியும் விகசிப்பும் தொடர்ந்து அவனை விரட்டிக்கொண்டிருக்கும். அது போர் முனை என்றாலும் மத்தியதர வாழ்வானாலும். நவீன இலக்கியமே அவ்வாறுதான் உருவாகிறது.

இலக்கிய வாசிப்பே பெரும் நம்பிக்கையை சிதைப்பதென மூத்த எழுத்தாளர்கள் குறிப்பிடுவது உண்டு. வாழ்வுமீதான நல் அபிப்ராயமும் நம்பிக்கையும் “இந்த வாழ்வு நம்மை ஒன்றும் செய்துவிடாது, வாழ்க்கை வாழத்தான் என்கிற“ போலி நம்பிக்கைகளை அது மாற்றும். உண்மையில் அது வாழ்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்தும். அதே நேரம் வாழ்வை எதிர்கொள்ள போராடும் வலிமையையும் தரும். உறவுகளை எவ்வளவு ஆழமாக புரிந்துகொள்கிறோம் என்பதை இலக்கியம் காட்டும். இதெல்லாம் நாம் ஏற்கெனவே கேட்டு வாசித்து பழகியதுதான். இப்போது ஏன் குறிப்பிட வேண்டும்? காரணம், விஜயராவணன் தமிழ் இலக்கியத்தின் மிக நீண்ட வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே. இலக்கியம் மட்டுமல்ல கலையின் எதுவும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டிருப்பவை. அதனால்தான் தட்டையான சிந்தனையும் தேடலும் உள்ள ஒருவரால் கதை தன்னை அனுக முடியாதபடி நிற்கிறது. ஓவியங்களையும் சிற்பங்களையும் இசையையும் பார்க்கின்ற அத்தனைபேரும் ஆழமாக அனுபவிக்கிறதில்லை.

ஒருகதை சொல்லி முடிக்கும்போது “ஆமாம் இது எனக்கும் நடந்திருக்கிறது” என்று நினைவுகூர்ந்துகொள்வது அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், ஒரு படைப்பு வாசித்ததுமே அது உடனே வாசகனின் ஏதோவொரு அனுபவத்தைத் தொட்டுவிடுவது கிடையாது. அப்படி அடையாளம் காணப்படுமென்றால் அதற்கு வெகுஜன இலக்கியத்தில்தான் நடக்கும்.  வெகுஜன இலக்கியம் யூடியூப்பில் ஓடும் ஷாட்ஸ் மாதிரி. கணநேரத்தில் அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறோம். நம்மிடம் துக்கத்தை, சிரிப்பை, ஆச்சர்யத்தை, கருணையை இப்படி சில உணர்வுகளைக் கோருகிறது. சமூக அவலங்களையும் அக்கறைகளையும் அது வெளிப்படுத்தும். இவை எழுப்பும் குரல்களுக்கு இன்றைக்கு மதிப்பு அதிகம். ரோட்டில் நடக்கும் ஒரு மூதாட்டியின் வீடியோ ஒன்றை பின்னனி இசையுடன் வெளியீட்டால் போதும் அதன் மதிப்பு. ஆனால் எழுத்தாளனின் செயல்பாடு வேறு. அவன் பிரச்சாரகன் அல்ல. சமூக அக்கறைக் கொண்டவனும் அல்ல. அவனுடைய தெரிவில் வாழ்க்கை எது என்ற கேள்விதான் உள்ளது.

பொதுவாக இளம் எழுத்தார்களுக்கு இரண்டுவிதமான கேள்விகள் அவனை எழுத வைக்கும். ஒன்று, அவனுடைய மிக நீண்ட வாசிப்பு. அதில் அவன் அடைந்த சில கேள்விகள். அவனது உலகத்திற்குள் அதன் உரையாடல். பிறகு தன்னாலும் இதுமாதிரியான கதைகளை எழுத முடியும் என்கிற “பாவனை”. இதை ஏன் பாவனை என்று சொல்கிறேன் என்றால், இது ஒருவகையில் தனது ஆதர்ச படைப்பாளியை போன்ற பாவனையால் உருவாவது. அவரது கதைமொழியைக் கொண்டிருக்கும்.

இரண்டாவது, இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகளின் ஒன்றான வாழ்வுமீதான சிறிய விலகல். ஆழ்மனத்தவிப்பு, கடந்த கால நினைவுகள், எதிர்கால லட்சியங்கள் என்று அது நீளும். இந்த இரண்டு அம்சங்களும் முதல் படைப்பில் நன்கு வெளிப்படும்.

முதல் கேள்வியில் குறிப்பிட்ட பாவனையைத்தான் முன்னோடியின் “மொழி வழி” பாதிப்பு என்று விமர்சகர்களால் இளம் எழுத்தாளன் விமர்சிக்கப்பட்டு பிறகு அந்தப் பாதிப்பு அவரது அடுத்தடுத்தப் படைப்புகளில் உதிந்துவிடும் என்று சொல்வது. இந்த இரண்டும் இல்லாத படைப்பு நிச்சயம் வெகுஜன இலக்கியத்திற்கு உரியது என்று சந்தேகமின்றி நிறுத்தலாம். அத்தகையப் படைப்புகளுக்கு தீவிர இலக்கியத்தில் இடம் இல்லை. அதன் உள்ளடக்கம் எத்தகைய புதிய உத்திகளைக் கொண்டிருந்தாலும் அது இலக்கியப் படைப்பு ஆகாது..

விஜயராவணின் கதைகளை தீவிர இலக்கியப் படைப்பின் வரிசையில் வைக்க முடியாது. அவரது கதைகள் பொதுவெளி மனவுணர்களை பேசுகின்றன. அக்கதைசொல்லிக்கு வாழ்வுமீதான எந்தக் கேள்விக்கும் அர்த்தம் தேடுவது தேவையற்றது.

உதாணத்திற்கு முதல் கதையான சிட்டுக்குருவியை எடுத்துக்கொள்வோம், செல்வரெத்தினம் என்கிற ஐம்பது வயதுடையவர் ஆசையாகக் கட்டிய வீட்டிற்குள் கூடுகட்டும் சிட்டுக்குருவியைப் பற்றியது. அந்தக்கூட்டிற்காக அவர் விரும்பி மாட்டிய சரவிளக்கைப் போடாமலேயே இருக்கிறார். குருவி முட்டையிட்டு குஞ்சு பொறித்து கிளம்பிவிடுகிறது அவ்வளவுதான் கதை.. முடிவில் மொபைல் போன் தொழில்நுட்பம் பற்றி எச்சரிக்கை வருகிறது. ஆனந்தவிகடன் இதழிலும் இப்படியான கதைகளை நாம் வாசிக்க முடியாது.

மொட்டை மாடி என்கிற கதை. சிறுவயதில் வீட்டில் எந்த வேண்டுதல் என்றாலும் மொட்டை போடும் சிறுவனின் கதை. அதுதான் அப்படியொரு தலைப்பு கதைக்கு. கதைசொல்லி மொட்டை அடிக்கிற சம்பவங்களை கோர்வையாக நமக்குச் சொல்கிறார். சில இடங்களில் எள்ளலாக குறிப்பிடுவதுகூட வாசிக்க உவப்பாக இல்லை அவ்வளவு தட்டையான மொழி நடை. மொட்டைத்தலையும் கத்தியுமாக அவரது உவமைகள். இரயில் பற்றிய கதை என்றால் “அவனுக்கு தடதடவென வாய் உளறும்” என்று எழுதுகிறமாதிரி.

முகங்கள்- சிறுவயதில் செய்த தவறுக்காக அடி வாங்கி ஓடிப்போன பையனைப் பற்றி அப்பா நினைவுகளில் எழும் கதை. கிட்டத்தட்ட மொட்டைமாடி, சிட்டுக்குருவி வகைதான். முகமூடி விற்கிற ஒருவனை அப்பா சந்திக்கிறார் அதே நினைவாக இருக்கிறார். தன் மகனாக இருக்குமென்று முகமூடி விற்கிறவனைத் தேடுகிறார். பிறகு வழக்கமான கனிவும் வேதனையும்.

நாட்களின் ஓட்டத்தில் எதையோ தேடி அலையும் மக்களுக்கு முகமூடி மனிதன் எப்போதோ கடந்த காலமாகியிருப்பான். ஒருவேளை காலம் அவனது முகமூடியையும் பிடுங்கியிருக்கலாம்.

 

இப்படி சில வரிகளால்தான் அந்த அப்பாவின் கசப்பான நினைவுகளைச் சொல்ல கதைசொல்லியால் முடிகிறது. இதுபோன்று- வாசிப்பனை -அலுப்பூட்டும் நிறைய வரிகள் நிழற்காடு தொகுப்பில் உள்ளன. கதை என்பதே மொழியால் உருவாவது என்பதை நாம் நினைவுபடுத்தத்தான் வேண்டுமா?

நிழற்காடு என்கிற கதை ஊரில் காட்டுக்குள் போனவர்கள் நிழலாக மாறியதைப் பற்றியது. ஆனால் கதை வெவ்வேறு மனவோட்டங்களில் பயணிக்கிறது. காகிதக்கப்பல் மீண்டும் மொட்டைமாடி கதையில் வருகிற அதே சிறுவன் ஆனால் இவன் கல்கத்தாவில் சிறிய உணவகத்தில் வேலை பார்க்கிறான். கப்பலில் ஏற வேண்டுமென்கிற ஆசை தவிர அவனுக்கு வேறொன்றும் கிடையாது. இந்தக் கதை சற்றே நல்ல கதையாக மாறுகிறது. குழந்தைகளின் கதை உலகத்தை வாசித்த அனுபவத்தை அளிக்கிறது. சீற்றம் கொண்ட கடலைப் போல் இளைஞன் கோபமாய் முணுமுணுத்தான்  என்கிற வரிகள் மீண்டும் இரயில் தண்டவாளம் உவமையை நினைவூட்டுகிறது. சிறுவனின் பதற்றமும் ஆசையும் கதையை சிறுவர்களின் உலகனுடன் நம்மை பொறுத்த அனுமதிக்கிறது. சிறுவர்களுக்கே உரிய ஆசையும் ஏமாற்றமும் என மிக அழகாக கதை முடிந்துவிடுகிறது.

அநாமதேய சயனம், உடைக்கப்படாத கால்பந்து, போதிசத்வா போன்றவை கதைகளாக எழுதப்பட்டுள்ளன ஆனால் வாசகனுக்கு புதிய உலகத்தையோ அனுபத்தையோ ஏற்படுத்தவில்லை. அநாமதேய சயனம் கதை உறக்கத்தை இழந்துவிட்ட இளைஞனின் வாழ்க்கையை குறுக்கு வெட்டாக விவரிக்கிறது அவ்வளவுதான்.. உறக்கமின்மை என்பது இன்றைய காலத்தில் புதிய கருவே இல்லை. அப்படியே அது கதையாக மாற்றபடுகிறதா என்றால் அதில் எந்த அனுபமும் கதைசொல்லிக்கு கதையாக்க போதவில்லை.

பேசும் தேநீர் கோப்பைகள் மட்டுமே இதில் மிக நல்ல வாசிப்பனுபத்தை ஏற்படுத்தியதாக உணர்கிறேன். இந்த ஒரு கதைதான் வாசகனை தன்னை நோக்கி வர அழைக்கிறது. இரண்டு வயதானவர்களின் உரையாடல்தான் கதை. புஜி மலை கதை முழுக்க ஒரு படிமமாக விரிகிறது. ஜப்பானியரின் உலகத்தைப் பற்றிய அவ்வளவு துல்லியமான விவரனை. போர்ஹேஸை நினைவுபடுத்தும் கதாப்பாத்திரம். கதை இந்த உலக விதிகளிலிருந்து விலகி விடுகிறது. புனைவுக்குள் அது உருவாக்கும் கட்டமைப்பை நம்ப வைக்கிறது. இது ஒரு நல்ல சிறுகதை என்று சந்தேகமில்லாமல் கூறலாம்.

விஜயராவணன் அவரது கதைகளை சமூகப் பிரச்சனையோடு முடித்துவிட முனைவதுதான் கதைகள் தேங்கிப் போகிறதோ என்று தோன்றுகிறது. இலக்கியத்தின் ஆற்றலே அது சமூகப் பிரச்சனையை சிறிதும்  பொது சிந்தனையோடு வைத்துக்கொள்வதில்லை என்பதுதானே. இந்த விமர்சனத்தில் இத்தகைய தொனியை உருவாக்கியதற்காக விஜயராவணன் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு தீவிர வாசகனாக கதைகளைத் தேடியலையும் காலக்கட்டத்தில் அவனுக்கு அசாத்திய அனுபவத்தை உண்டாக்க வேண்டாம், குறைந்தது திருப்தியாவது செய்வது நியாயம் இல்லையா? முகநூலில் விழும் விருப்பக் குறிகளும் பிரசுரமாகும் வசதிகளும்கூட ஒரு கதை நன்றாக வருவதைத் தடுக்கும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

ஒரு புத்தகத்தை வாசகன் கையில் எடுத்ததுமே வாங்கிவிடுவதில்லை. முதலில் அவனை கவர்வது அதன் அட்டை. அதன் வசீகரமும் தலைப்பும் பின்னட்டைக் குறிப்பும் சில கணங்கள் அவன் கையைவிட்டு செல்லாமல் நிறுத்தும். அட்டையின் வடிவமைப்பு அவனை எங்கோ ஓரிடத்தில் புதிய ரசனையை கோடிட்டுக் காட்டும். தலைப்பின் பிடிபடாத தன்மை எதையோ தனக்குச் சொல்ல முனைவதை உணர்த்தும். பிறகு அவன் அட்டையைப் புரட்டுகிறான். ஆசிரியர் அவன் கேள்விபட்ட பெயராக இல்லாததால் யாரென்று அடுத்த அடுத்தப் பக்கங்களை திருப்பிப் பார்க்கிறான். ஆசிரியரைப் பற்றி குறிப்பும் நன்றியும் அவள் கேள்விபட்ட சில இலக்கிய இதழ்களின் பெயர்களும் அவனை அந்த நூலை வாங்குவதற்கான உத்தரவாதத்தை அளிக்கும். எழுத்தாளரை அவன் அதற்குமுன் கேள்விபட்டிருக்கவில்லையென்றாலும் அந்தப் புத்தகத்தின் பதிப்பகமும் அதன் நேர்த்தியான வடிவமைப்பும் கதைகளை பிரசுரித்த சிறுபத்திரிக்கைகளும் இங்கு முக்கிய பங்காற்றுகின்றன.

அப்படித்தான் நிழற்காடு தொகுப்பும். இதில் உள்ள எல்லா கதைகளும் இணைய இதழ்கள், சிறுபத்திரிக்கைகளில் பிரசுரமானவை என்பதை நம்ப முடியவில்லை. இரண்டு கதைகளைத் தவிர மற்ற எந்தக் கதைக்கும் இந்த இதழ்களில் பிரசுரமாகும் அளவுக்கு இலக்கியத் தகுதி இல்லை. தீவிரமாக இலக்கிய வாசிப்புள்ள இளம் வாசகர்கள் அனைவரும் பல்வேறு மொழி இலக்கியங்களை சமகாலத்தில் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். இளம் படைப்பாளியை வளர்க்கும் பெரும் பங்கு இலக்கிய இதழ்களுக்கு இருக்கிறது. கதைகளை நிராகரிக்கும் முழு உரிமையும் அதன் ஆசிரியருக்கு உண்டு. அவர்கள் ஏன் அதை நிராகரிப்பதில்லை? இத்தொகுப்பை வாசிக்கும்போது இக்கேள்வி நிச்சயம் எழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *