Monday, April 15, 2024

எங்களைப் பற்றி

சிற்றில் வாசிப்பு மையம்

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம்   இன்மை பெறின்

வணக்கம்,

                                      இலக்கியம் உருவானதிலிருந்தே விமர்சனம் என்கிற துறையும் உருவாகிற்று. நம்முடைய இலக்கிய மரபில் விமர்சனத்திற்கென தனி இடம் உண்டு. தொல்காப்பியம் அதற்கு ஒரு சான்று. சங்க இலக்கியங்களில் உள்ள அத்தனை பாடல்களும் செய்யுள் வடிவங்களும் வாசிப்பாலும் விவாதக்கூடங்களாலும் தொகுக்கப்பட்டன. உதாரணத்திற்கு இங்கு திருக்குறளுக்கு எத்தனை உரைகள் எழுதப்பட்டுள்ளன. எத்தனை விதங்களில் அவை வாசிக்கப்படுகின்றன.  உரை என்பதே இன்னொரு வாசிப்பு என்று நாம் கொள்ளுவது இல்லை. நவீனத்துவ காலக்கட்டத்தில் தமிழலக்கிய முன்னோடிகளிலிருந்து சமகால மூத்த எழுத்தாளர்கள்வரை அனைவரும் இலக்கிய விமர்சனத்தை ஒரு கலையாக வளர்த்தெடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு விமர்சனம் என்கிற துறையே அழிந்து போய்விட்டது என்று சொல்லலாம்.

ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நிறைய புத்தகங்கள் வெளியாவதும் புதிய இளம் படைப்பாளிகள் அறிமுகமாவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பருவகாலம் மாதிரி சில வாரங்கள் மட்டும் புத்தக வெளியீடு, அறிமுகக்கூட்டம், விருது என்று அதன் வருகை முடிந்துபோய்விடுகிறது. குழு சார்ந்த மனோபாவத்தால் ஒரு தரப்பினரின் புத்தகம் இன்னொரு தரப்பினரால் கண்டுகொள்ளப்படுவதில்லை. அதனால் புத்தகங்கள் சரியாக வாசிக்கப்பட்டு அந்தப் படைப்புக்கான நியாயத்தை நாம் வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. சிறுபத்திரிக்கைகள் படைப்புகளை மதிப்பீடுவதும் நிராகரிப்பதும் குறைந்திருப்பது நாம் அறிந்ததே.

ஒரு புத்தகத்தைப் பற்றி நடுநிலையாக வைக்கப்படும் விமர்சனம் என ஒன்றை தேட வேண்டியுள்ளது. இன்னொருபுறம், படைப்பாளிகளே தங்களது புத்தகத்தின் விமர்சனங்களை அவரவர் இணையத்தளங்களில் வெளியிட்டுக்கொள்வதும் நடக்கிறது. சமகாலத்தில் தீவிரமான இலக்கிய ஆளுமைகளை  நாம் கொண்டிருக்கிற சூழலில், ஏன் நம்மால் கறாரான விமர்சனங்களை வளர்க்க முடியவில்லை என்பது ஆச்சரியம்தான்!  இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த விருதுகள் இங்கு நிறைய இருக்கின்றன. ஒருசில கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. படைப்புகள் குறித்து விவாதிப்பதற்கான நம்மிடமுள்ள சொற்களை  முகநூல் பதிவு, வாட்சஸப் ஆடியோ குறுஞ்செய்திகள் இடம் பெயர்த்துவிட்டன. ஆகையால் இளம் படைப்பாளிகளுக்கு தங்களது படைப்புகள் குறித்த ஒன்று, இரண்டு கட்டுரைகள்கூட கிடைப்பதில்லை.

நாங்கள் விமர்சனத்தை மட்டுமே முன்னெடுக்கும் நோக்கத்தோடு இப்படியொரு தளத்தை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தோம். ஒரு படைப்பு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதை எழுதி விவாதிக்க ஆரம்பித்தோம். எங்களுடைய ரசனை, கோட்பாடு, அளவுகோல்கள் என ஒவ்வொன்றாக அந்தப் படைப்பு குறித்து உரையாட தொடங்கியது. அதன் முடிவு இந்தத் தளம் உருவாகிற்று. இளம் படைப்பாளியின் ‘முதல் படைப்பு அல்லது முதல் இரண்டு படைப்புகள் குறித்தக் கட்டுரை’ என்று முதலில் இதைத் தொடங்கியிருக்கிறோம். இதில் சில விலக்கங்கள் வைத்துகொள்வது சரியாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. அதன்படி    அ) எந்தப் படைப்பு விருதோ அல்லது அதிகப்பபடியான வெளிச்சம் பெற்றுவிடுகிறதோ அதை முன்னிலைப்படுத்துவது இல்லை. ஆ) ஒரு படைப்பு குறித்து விதந்தோதும் கட்டுரைகள் இங்கு இடம் பெறாது. இ) படைப்புமீதான விமர்சனத்தில் இங்கு யார் வேண்டுமானாலும் பங்காற்றலாம்.  உங்களுக்கு இருக்கும் கறாரான எந்த மதிப்பீடும், அது நிச்சயம் அப்படைப்பு வாசிக்கப்பட்டதற்கான நியாயத்தைத் தரும் என்றால் இங்கு சேர்க்கப்படும். இது ஓர் கூட்டுமுயற்சி. நாம் படைப்புகளுடன் மட்டுமே உரையாடுகிறோம். இளம் படைப்பாளி தனது படைப்பின் கலவையான விமர்சனங்களை இங்கு காண்பார்.

 “சிற்றில்” விமர்சனத் தளத்தின் செயல்பாட்டில் உங்களுக்கு எந்தக் கருத்துகள் இருந்தாலும் தெரிவிக்கலாம். முக்கியமாக, இந்தத் தளத்தில் இடம் பெறுகின்ற விமர்சனம் மட்டுமே அந்தப் படைப்பை தரநிர்ணயம் செய்துவிடாது. அதோடு இது மட்டுமே அப்படைப்பிற்குரிய விமர்சன மதிப்பீடும் அல்ல. இது விமர்சனத் துறைக்கு எங்களால் முடிந்த பங்கு.

                                                                                                                                                                                                                                                                                  நன்றி

                                                                                                                                  சிற்றில்                                                                                                                                                       sitrilcritics@gmail.com